கொரோனா இரண்டாம் அலை தீவிரத்தின் உச்சத்தை அடைந்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வரும் நிலையில் இந்தியாவில் பல திரை பிரபலங்களும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உயிர் இழந்து வருவதை நம்மால் தினசரி காணமுடிகிறது. 

சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான சாருஹாசன் அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் எண்ணற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக இவர் நடித்த திரைப்படம் தாதா87. விஜய் ஸ்ரீ இயக்கத்தில் வெளிவந்த தாதா87 திரைப்படத்தை கலை சினிமாஸ் கம்பெனி சார்பில் கலைச்செல்வன் தயாரித்திருந்தார். தொடர்ந்து கலை சினிமா சார்பில் நடிகர் மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் TIME UP  திரைப்படமும் தயாரானது. கடந்த டிசம்பர் மாதம் இப்படத்தின் டீசர் வெளியானது. 

இந்நிலையில் தயாரிப்பாளர் கலைச்செல்வன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தார். சிகிச்சையில் இருந்த கலைச்செல்வன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். 

தாதா 87 திரைப்படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் தயாரிப்பாளர் கலை செல்வனின் மரணம் குறித்து பகிர்ந்துள்ளார். அதில்,

“தாதா87 படத்தை என்னுடன் இணைந்து தயாரித்த எனது நண்பர் கலைச்செல்வன் இன்று கொரோனா எனும் கொடிய வைரசால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்”.

“உங்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்”  

என தெரிவித்துள்ளார்.

இயக்குனர் கே.வி.ஆனந்த், நடிகர் பாண்டு என பல சினிமா பிரபலங்களும் அவர்களது குடும்பத்தாரும் கொரோனா தொற்றால்  பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்து வரும் நிலையில் மேலும் ஒரு தயாரிப்பாளரான கலைச்செல்வன் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.