மலையாளத் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளராக திகழ்ந்த தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தனக்கே உரித்தான பாணியில் மக்களின் மனம் கவர்ந்த பல பிரம்மாண்டமான திரைப்படங்களை தயாரித்தவர். 1990-களில் தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல முக்கியமான திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

குறிப்பாக இயக்குனர் பவித்ரனின் வசந்தகால பறவை மற்றும் சூரியன், இயக்குனர் கதிரின் காதல் தேசம், இயக்குனர் பிரவீன் காந்தியின் ரட்சகன், இயக்குனர் வெங்கடேஷின் நிலாவே வா, தளபதி விஜய் கதாநாயகனாக நடித்த என்றென்றும் காதல் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார்.

அந்த வகையில் இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக திகழும் இயக்குனர் ஷங்கரின் முதல் படமான ஜென்டில்மேன் மற்றும் இரண்டாவது படமான காதலன் ஆகிய திரைப்படங்களையும் கே.டி.குஞ்சுமோன் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் அர்ஜுன் கதாநாயகனாக நடிக்க, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வெளிவந்த ஜென்டில்மேன் திரைப்படம் மெகா ஹிட் பிளாக்பஸ்டர் ஆனது.

1990-களில் மிக முக்கிய தயாரிப்பாளராக திகழ்ந்த கே.டி.குஞ்சுமோன் பிறகு தயாரிப்பில் இருந்து விலகி இருந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தயாரிப்பில் இறங்கியுள்ள கே.டி.குஞ்சுமோன் ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சமீபத்தில் ஜென்டில்மேன் படத்தின் இசையமைப்பாளரை கணித்து சொல்பவர்களுக்கு தங்க நாணயம் பரிசு அளிப்பதாகவும் அறிவித்திருந்தார். இதனையடுத்து தற்போது ஜென்டில்மேன் 2 திரைப்படத்திற்கு பாகுபலி,RRR படங்களின் இயக்குனர் M.M.கீரவாணி இசையமைப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். எனவே விரைவில் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.