சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் தனது நடந்தால் கவர்ந்த ராகவா லாரன்ஸ் சிறந்த நடன இயக்குனராகவும், மாஸ்ஸான கமர்சியல் இயக்குனராகவும், நடிகராகவும் பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக தென்னிந்திய திரை உலகில் பல ப்ளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்து மகிழ்வித்து வருகிறார்.

முன்னதாக ராகவா லாரன்ஸின் சூப்பர் ஹிட் திரைப்படங்களான முனி - காஞ்சனா சீரிஸ் வரிசையில் அடுத்ததாக துர்கா படத்தில் லாரன்ஸ் நடிக்க உள்ளார். துர்கா திரைப்படத்தை இந்திய சினிமாவின் முன்னணி ஸ்டண்ட் இயக்குனர்களான அன்பறிவு சகோதரர்கள் இயக்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

மேலும் இயக்குனர் வெற்றிமாறனின் கதை திரைக்கதையில், இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கும் அதிகாரம் படத்திலும் நடிக்கிறார் ராகவா லாரன்ஸ்.இதனிடையே, FiveStar கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் S.கதிரேசன் இயக்குனராக களமிறங்கும் ருத்ரன் படத்திலும் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். 

ருத்ரன் படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க, சரத்குமார், நாசர் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். R.D.ராஜசேகர் ஒளிப்பதிவில் ஜீவி பிரகாஷ்குமார் இசை அமைக்கும் ருத்ரன் திரைப்படம் அடுத்த ஆண்டு (2022) ஏப்ரல் 14ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ருத்ரன் திரைப்படம் விரைவில் OTT தளத்தில் ரிலீசாக உள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. இந்த வதந்திகளுக்கு தயாரிப்பாளர் S.கதிரேசன் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ட்விட்டரில் ருத்ரன் திரைப்படத்திற்கான நேரடி OTT ரிலீஸ் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக பொய்யான  செய்தி வெளியானது. இதற்கு பதிலளிக்கும் விதமாக தயாரிப்பாளரும் இயக்குனருமான S.கதிரேசன் “எனக்கே இது தெரியாது 😆" என அந்த செய்தியை குறிப்பிட்டு பதிலளித்துள்ளார்.