தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் சக்ரவர்த்தியாகவும் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகராகவும் திகழும் தளபதி விஜய் முதல்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தற்போது நடித்து வரும் திரைப்படம் வாரிசு. பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் உருவாகும் வாரிசு படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா க்ரிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்யும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 

அடுத்த ஆண்டு(2023) ஜனவரியில் பொங்கல் வெளியீடாக வாரிசு திரைப்படம் ரிலீஸாகவுள்ளது. முன்னதாக நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு மட்டுமே பண்டிகை காலங்களில் முன்னுரிமை வழங்கப்படும் என தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை வாரிசு படத்தின் ரிலீசில் சர்ச்சைகளை கிளப்பியது. இதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவை சார்ந்த பலரும் வாரிசு திரைப்படத்திற்காக தங்களது ஆதரவு குரல் கொடுத்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அவர்கள் வாரிசு ரிலீஸ் சர்ச்சைகள் குறித்து பேசினார். அதில், தமிழில் வாரிசு, தெலுங்கில் வாரசுடு என வெளியாகும் வாரிசு திரைப்படத்தை ஹிந்தியிலும் சேர்த்து 3 மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

மேலும், “மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா மற்றும் நந்தாமொழி பாலகிருஷ்ணாவின் வீரசிம்ம ரெட்டி இரண்டு படங்களும் பொங்கல்/சங்கராந்தி வெளியீடாக ரிலீஸ் ஆகிறது. வாரிசு படத்தின் ரிலீஸை நான் மே மாதமே அறிவித்துவிட்டேன். வால்டர் வீரய்யா ரிலீஸ் ஜூன் மாதமும், வீரசிம்மர் ரெட்டி படத்தின் ரிலீஸ் அக்டோபர் மாதமும் அறிவித்தார்கள். இந்த இரண்டு திரைப்படங்களையும் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கும் எங்களுக்கும் இது தொடர்பாக எந்த விதமான கருத்து வேறுபாடுகளும் இல்லாத சமயத்தில் மற்றவர்கள் ஏன் இது குறித்து கவலைப்பட வேண்டும். நீண்ட காலமாக தெலுங்கு திரையரங்க உரிமையாளர் உடன் எனக்கு நல்ல நட்புறவு இருக்கிறது. எனவே தெலுங்கில் மற்ற படங்களை விடவும் நல்ல மற்றும் அதிகமான திரையரங்குகள் வாரிசு திரைப்படத்திற்கு கிடைக்கும்” என தெரிவித்துள்ளார்.