இந்தியா முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 15 ஆயிரத்தை கடந்து வருகிறது. உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்களை மேற்கொண்டு வருகின்றன.

சாமானிய மக்கள், அரசியல் பிரமுகர்கள், திரைத்துறை பிரபலங்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல தமிழ் படத் தயாரிப்பாளரான பாபா பக்ருதீன் மரணமடைந்துள்ளார்.

அரசு, சத்ரபதி போன்ற தமிழ் திரைப்படங்களை தயாரித்த திரைப்பட தயாரிப்பாளர் சூப்பர் குட் பாபு மகாராஜா என்கிற பாபா பக்ருதீன். இவர் கடந்த 24ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து கடந்த 25ம் தேதி அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பாபா பக்ருதீன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறை பிரபலங்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சூப்பர் குட் பிலிம்ஸ் பட நிறுவனத்தில் 25 வருடங்கள் தயாரிப்பு நிர்வாகியாகவும், கபாலி படத்தில் தயாரிப்பு நிர்வாகியாகவும் இருந்தவர் பாபுராஜா. இவர் கடந்த 2003ம் ஆண்டில் அரசு படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனார். இவர் தனது மகன்களை கதாநாயகன்களாக வைத்து திருப்பதிசாமி குடும்பம் படத்தை 2017ம் ஆண்டு தயாரித்தார்.

ஜெ.ஜெ. பிலிம்ஸ் என்று தனியாக நிறுவனம் தொடங்கி நடத்தி வந்த போதும் சூப்பர் குட் பிலிம்ஸ் பாபுராஜா என்றே அனைவராலும் அறியப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.