தனக்கே உரித்தான பாணியில் வித்தியாசமான பிரம்மாண்டமான திரைப்படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தவர் உழைப்பாளர் கேடி குஞ்சுமோன். குறிப்பாக இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ஜென்டில்மேன் & காதலன் மற்றும் நாகார்ஜுனா நடிப்பில் வெளிவந்த ரட்சகன் உள்ளிட்ட படங்கள் இவரது தயாரிப்புகள் தான்.

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் முதல் படமாக தயாரான ஜென்டில்மேன் திரைப்படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் கதாநாயகனாக நடித்திருந்தார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடிக்க ஜென்டில்மேன் திரைப்படம் மெகா ஹிட் பிளாக்பஸ்டர் ஆனது.

ஜென்டில்மேன் படத்தின் வெற்றியை தொடர்ந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஜென்டில்மேன் 2 திரைப்படம் தயாராகவுள்ளதாக சில வாரங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் அறிவித்தார். தொடர்ந்து பாகுபலி,RRR திரைப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கீரவாணி ஜென்டில்மேன் 2 படத்திற்கு இசையமைக்கிறார் எனவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஜென்டில்மேன் 2 திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல மலையாள நடிகை நயன்தாரா சக்கரவர்த்தி நடிப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது ஜென்டில்மேன் 2 திரைப்படத்தின் மற்றொரு கதாநாயகியாக பிரபல மலையாள நடிகை பிரியா லால் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் மோகன் லாலின் ஜனகன் திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில்  நடிகையாக அறிமுகமான நடிகை பிரியா லால், தொடர்ந்து கில்லாடி ராமன், லார்ட் லிவிங்ஸ்டன் 7000 கண்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ஜீனியஸ் திரைப்படத்திலும் பிரியா லால் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.