தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சீரியல் தொடர்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை பிரியா பவானி சங்கர். மேயாத மான் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தார். மேயாத மான் படத்தின் வெற்றியை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா என பிரியா நடித்த படங்கள் வெற்றி படமாக அமைந்தது. அதுமட்டுமின்றி அவ்வப்போது போட்டோஷூட்கள் நடத்தி அதனை சமூக வலைதளங்களில் பதிவிட பிரியாவிற்கு ரசிகர்கள் அதிகரிக்க தொடங்கினர்.

இன்று பிரியா பவானி சங்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் Common DP வெளியிட்டு தொடர்ந்து வாழ்த்துக்களை கூறிய வண்ணம் உள்ளனர். இந்நிலையில் பத்து தல திரைப்படத்தில் பிரியா பவானிசங்கர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பிரியா பவானிசங்கருக்கு இன்று பிறந்தநாளை அடுத்து அவருக்கு ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது. இதனையடுத்து பத்து தல படத்தில் பிரியா பவானிசங்கர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு மற்றும் கெளதம் கார்த்திக் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் தாசில்தாராக பிரியா பவானி நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் இணையத்தில் கசிந்து வருகிறது. கன்னடத்தில் வெளியாகி ஹிட் அடித்த மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக் தான் பத்து தல. கதைப்படி சிம்பு கதாபாத்திரத்திற்கு ஜோடி இல்லை. ஆகவே கெளதம் கார்த்திக்கிற்கு அவர் ஜோடியாகலாம் எனத் தெரிகிறது.

சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அவர் நடித்துவரும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதத்துடன் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது