2009-ம் ஆண்டு ஜெய் நடித்து வெளியான வாமனன் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த். அதன் பின் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என அனைத்து மொழி படங்களிலும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தினார். கடந்த ஆண்டு பிரியா ஆனந்த் நடிப்பில் LKG மற்றும் ஆதித்ய வர்மா படங்கள் வெளியானது. இந்நிலையில் பிரியா ஆனந்த் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டால் மகிழ்ச்சியில் உள்ளனர் அவரது ரசிகர்கள். 

கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான புனித் ராஜ்குமார் சேத்தன் குமார் இயக்கத்தில் ஜேம்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக பிரியா ஆனந்தை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். கர்நாடக மாநிலம் ஹம்பியில் நடந்து வரும் படப்பிடிப்பில் பிரியா ஆனந்த் கலந்து கொண்டுள்ளார். புனித் ராஜ்குமார் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான ராஜகுமாரா படம் மூலம் தான் பிரியா ஆனந்த் கன்னட திரையுலகில் அறிமுகமானார்.

இந்நிலையில் பிரியா மீண்டும் புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாகியுள்ளார். ஜேம்ஸ் படத்தில் பிரியா ஆனந்த் நடிப்பதை பார்த்த கன்னட சினிமா ரசிகர்கள் ராசியான ஜோடி மீண்டும் சேர்ந்துவிட்டது, இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளனர்.

ஜேம்ஸ் படத்தில் நடிப்பது பற்றி பிரியா ஆனந்த் கூறியிருப்பதாவது, ராஜகுமாரா படம் போன்றே ஜேம்ஸும் கமர்ஷியல் ஃபேமிலி என்ட்ர்டெய்னர் ஆகும். என் கதாபாத்திரம் சுவாரஸ்யமானது. மீண்டும் புனித் ராஜ்குமாருடன் சேர்ந்து நடிப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. ராஜகுமாராவில் எங்கள் ஜோடி மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

இம்முறை என் செல்ல நாயும் சில காட்சிகளில் வரும். ஜேம்ஸ் பட செட்டில் மக்கள் எங்களை ராஜகுமாரா, ராஜகுமாரி என்று அழைத்தார்கள். இது முதல் முறை அல்ல. நான் கோவாவுக்கு சென்றபோது கூட என்னை புனித் ராஜ்குமார் பட ராஜகுமாரி என்று மக்கள் அழைத்தார்கள். கன்னட ரசிகர்கள் என் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறார்கள். லாக்டவுனுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டேன். அதனால் ஜேம்ஸ் படப்பிடிப்பில் நம்பிக்கையுடன் கலந்து கொள்கிறேன் என்றார்.

பிரியா ஆனந்த் கணேஷின் ஆரஞ்ச் படத்தில் நடித்திருந்தார். அது தான் அவர் நடிப்பில் கடைசியாக வெளியான கன்னட படம் ஆகும். ஜேம்ஸ் படத்தில் ஸ்ரீகாந்த், அனு பிரபாகர், ஆதித்யா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்திற்கு சரண் ராஜ் இசையமைக்கிறார்.

மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள சுமோ திரைப்படத்தில் நடித்துள்ளார் பிரியா ஆனந்த். பிப்ரவரி 14, ஆயிரம் விளக்கு உள்ளிட்ட படங்களை இயக்கிய ஹோசிமின் இப்படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. யோகி பாபு, வி.டி.வி கணேஷ் ஆகியோருடன் சுமோ வீரர் Yoshinori Tashiro-ம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இந்தப் படத்தின் முக்கிய காட்சிகளை ஜப்பானில் படமாக்கியுள்ளது படக்குழு. ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். பிரவீன் கே.எல் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். சுமோ விளையாட்டு சீனா மற்றும் ஜப்பானில் மிகவும் பிரபலம் என்பதால், இந்தப் படத்தை சீனா மற்றும் ஜப்பானில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த படத்தின் ரிலீஸுக்காக ஆவலில் உள்ளனர் திரை ரசிகர்கள்.