கனா கண்டேன் படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானவர் நடிகர் பிரித்விராஜ். அதன் பின் பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, நினைத்தாலே இனிக்கும், அபியும் நானும், ராவணன் போன்ற படங்களில் நடித்து அவருக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். மலையாளத்தில் முன்னணி ஸ்டாராக இருக்கும் பிரித்விராஜ் மோகன்லால் நடிப்பில் லூசிஃபர் என்ற படத்தையும் இயக்கியுள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அய்யப்பனும் கோஷியும் என்ற சூப்பர் ஹிட் திரைப்படம் வெளியானது. 

ஆடு ஜீவிதம் படப்பிடிப்பிற்காக ஜார்டன் சென்றவர், கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக, படக்குழுவுடன் அங்கேயே சிக்கி கொண்டார். அதன் பின் பத்திரமாக சொந்த ஊர் திரும்பிய கதை அனைவரும் அறிந்ததே. தற்போது மிக பிரம்மாண்ட திரைப்படத்தை திரையுலகிற்கு அளிக்கவுள்ளார் பிரித்விராஜ். 

இயக்குனர் ஆர்.எஸ். விமல், மெய் நிகர் தொழில்நுட்பத்தில் புதிய படம் ஒன்றை உருவாகவுள்ளதாக செய்திகள் வெளியானது. மகாவீர் கர்ணா படத்தைத் தொடர்ந்து தர்ம ராஜ்யா என்ற திரைப்படத்தை இதே போல மெய் நிகர் தொழில்நுட்பத்தில் படம்பிடிக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். சினிமாவில் வழக்கமாக பச்சை வண்ண சுவர் அல்லது திரைகளுக்கு முன்னால் எடுக்கப்பட்டு பின்னர் அந்த பச்சை நீக்கப்பட்டு கிராபிக்ஸில் தேவையான விஷயங்கள் சேர்க்கப்படும்.

ஆனால், விர்ச்சுவல் ரியாலிட்டி தயாரிப்பில் ஸ்டுடியோவுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான எல்ஈடி திரைகளுக்கு முன்னால்தான் படப்பிடிப்பு நடக்கும். திரையின் பின்னால் அந்த காட்சிகள் விரியத் திரைக்கு முன்னால் நடிகர்கள் நடிப்பார்கள். கோகுல்ராஜ் பாஸ்கர் இயக்கும் இந்தப் படத்தை ப்ரித்விராஜே தனது மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிக்கிறார். 

தற்போது உலகநாயகன் நடித்த மைக்கேல் மதன காம ராஜன் படத்தை பார்த்து பிரமித்துப் போயுள்ளார் பிரித்விராஜ். தனது மனைவியுடன் இந்த படத்தை பார்த்த அவர், உலகத் தரம் வாய்ந்த படம் என்றும், இப்போது பார்த்தால் கூட பிரம்மிப்பாக உள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும், நடிகை ஊர்வசியின் நடிப்பையும் குறிப்பிட்டு பாராட்டி உள்ளார். 

1991ம் ஆண்டு சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் வெளியான படம் மைக்கேல் மதன காம ராஜன். மைக்கேல், மதனகோபால், காமேஷ்வரன் மற்றும் ராஜு என 4 விதமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி இருப்பார் கமல். இந்த படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதும் பணியில் கமலும் கிரேஸி மோகனும் கலக்கி இருப்பார்கள். குஷ்பு, ஊர்வசி, ரூபிணி, மனோரமா, நாகேஷ், நாசர், டெல்லி கணேஷ், பொன்னம்பலம், கிரேஸி மோகன், பிரவீன் குமார் சோப்டி (பீம் பாய்) என ஏகப்பட்ட பிரபல நடிகர்களை ஒன்று திரட்டி இந்த படத்தை வேறு லெவலில் உருவாக்கி இருப்பார்கள்.

கமல்ஹாசனும், கிரேஸி மோகனும் கூட்டு சேர்ந்தால், காமெடிக்கு பஞ்சமே இருக்காது என்பதற்கு இந்த படம் ஒரு வரலாற்று சான்று என்றே சொல்லலாம். பிரித்விராஜ் போலவே 90ஸ் கிட்ஸும் இந்த படத்தை பார்த்து விமர்சனம் கூறி புகழ்ந்து வருகின்றனர்.