கனா கண்டேன் படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானவர் நடிகர் பிரித்விராஜ். அதன் பின் பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, நினைத்தாலே இனிக்கும், அபியும் நானும், ராவணன் போன்ற படங்களில் நடித்து அவருக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். மலையாளத்தில் முன்னணி ஸ்டாராக இருக்கும் பிரித்விராஜ் மோகன்லால் நடிப்பில் லூசிஃபர் என்ற படத்தையும் இயக்கியுள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அய்யப்பனும் கோஷியும் என்ற சூப்பர் ஹிட் திரைப்படம் வெளியானது. 

ஆடு ஜீவிதம் படப்பிடிப்பிற்காக ஜார்டன் சென்றவர், கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக, படக்குழுவுடன் அங்கேயே சிக்கி கொண்டார். அதன் பின் பத்திரமாக சொந்த ஊர் திரும்பிய கதை அனைவரும் அறிந்ததே. தற்போது மிக பிரம்மாண்ட திரைப்படத்தை திரையுலகிற்கு அளிக்கவுள்ளார் பிரித்விராஜ். 

இயக்குனர் ஆர்.எஸ். விமல், மெய் நிகர் தொழில்நுட்பத்தில் புதிய படம் ஒன்றை உருவாகவுள்ளதாக செய்திகள் வெளியானது. மகாவீர் கர்ணா படத்தைத் தொடர்ந்து தர்ம ராஜ்யா என்ற திரைப்படத்தை இதே போல மெய் நிகர் தொழில்நுட்பத்தில் படம்பிடிக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். சினிமாவில் வழக்கமாக பச்சை வண்ண சுவர் அல்லது திரைகளுக்கு முன்னால் எடுக்கப்பட்டு பின்னர் அந்த பச்சை நீக்கப்பட்டு கிராபிக்ஸில் தேவையான விஷயங்கள் சேர்க்கப்படும்.

ஆனால், விர்ச்சுவல் ரியாலிட்டி தயாரிப்பில் ஸ்டுடியோவுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான எல்ஈடி திரைகளுக்கு முன்னால்தான் படப்பிடிப்பு நடக்கும். திரையின் பின்னால் அந்த காட்சிகள் விரியத் திரைக்கு முன்னால் நடிகர்கள் நடிப்பார்கள்.

கோகுல்ராஜ் பாஸ்கர் இயக்கும் இந்தப் படத்தை ப்ரித்விராஜே தனது மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிக்கிறார். இது குறித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ள ப்ரித்விராஜ் திரைப்பட உருவாக்கத்தின் கலை மற்றும் அறிவியலில் இது ஒரு ஆச்சரியமான புதிய அத்தியாயம். மிக ஆர்வத்துடன் இதை எதிர்நோக்கியுள்ளேன். மாறும் காலம், புதிய சவால்கள், புதுமையான வழிமுறைகள்... சொல்ல ஒரு அட்டகாசமான கதை, படம் பற்றித் தொடர்ந்து தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் உருவாகவுள்ளது. தர்ம ராஜ்யா இந்தத் தொழில்நுட்பத்தில் உருவாகும் முதல் திரைப்படம் என்று கூறப்பட்டாலும், இந்தப் படத்தின் போஸ்டரிலும் முழுக்க இந்தத் தொழில்நுட்பத்தில் தயாராகும் முதல் இந்தியத் திரைப்படம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பிரித்விராஜின் இந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர் திரை ரசிகர்கள்.