ஒரு திரைப்படம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் மலையாள சினிமாவை காதலிக்க வைத்தது என்றால் அது இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளிவந்த பிரேமம் தான். பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி கதாநாயகனாக நடித்த பிரேமம் திரைப்படத்தில் கதாநாயகிகளாக சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டின் ஆகியோர் நடித்திருந்தனர்.

அழகிய காதல் திரைப்படமான பிரேமம் மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, கன்னடம் என இந்தியாவின் பல்வேறு மொழி சினிமா ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தது. மேலும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யா கதாநாயகனாக நடிக்க மலையாளத்தில் நடிகை சாய் பல்லவி நடித்த கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார்.

தொடர்ந்து இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் பகத் பாசில் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள பாட்டு திரைப்படம் தயாராகி வரும் நிலையில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனின் அடுத்த திரைப்படம் குறித்த ருசிகர தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மேஜிக் பிரேம்ஸ் புரொடக்ஷன் சார்பில் தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் ஒரு புதிய திரைப்படத்தை இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்குகிறார். இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் பிருத்விராஜ் நடித்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். முதல் முறையாக நயன்தாரா இப்படத்தில் பிருத்விராஜுடன் இணைந்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாகவும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.