தமிழ் திரை உலகின் பிரபல கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் பிரசன்னா, இயக்குனர் சுசிகணேசன் இயக்கத்தில் வெளிவந்த ஃபைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து கதாநாயகன், வில்லன், மற்றும் சிறந்த குணச்சித்திர நடிகராக பல திரைப்படங்களில் நடித்து சினிமா ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கிறார்.

குறிப்பாக அழகிய தீயே, அஞ்சாதே, அச்சமுண்டு அச்சமுண்டு, நாணயம்,  திருட்டுப் பயலே 2, ப.பாண்டி, துப்பறிவாளன், மாஃபியா உள்ளிட்ட படங்களில் தனது கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக நடித்திருப்பார் நடிகர் பிரசன்னா. இதனிடையே நடிகர் பிரசன்னா திரவம் வெப்சீரிஸ் மற்றும் இயக்குனர் மணிரத்தினத்தின் தயாரிப்பில் வெளிவந்த நவரசா ஆன்காலஜி வெப்சீரிஸில் அரவிந்த்சாமி உடன் இணைந்து பிராஜக்ட் அக்னி வெப் சீரிஸிரிசலும் நடித்துள்ளார். 

அடுத்ததாக நடிகர் விஷால் முதல்முறை இயக்குனராக களமிறங்கும் துப்பறிவாளன் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிரசன்னா நடித்து வருகிறார். இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் லண்டனில் தொடங்க உள்ளது. இந்த வரிசையில் அடுத்ததாக புதிய வெப்சீரிஸில் நடிகர் பிரசன்னா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

பிரபல தமிழ் இயக்குனர் பாலாஜி மோகனின் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்த விக்னேஷ் விஜயகுமார் இயக்குனராக அறிமுகமாகும் இந்த புதிய வெப்சீரிஸை ட்ரெண்ட் லௌட் மற்றும் ஓபன் விண்டோ தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். GRN.சிவக்குமார் ஒளிப்பதிவில் பரத் சங்கர் இசை அமைக்கும் இந்த வெப்சீரிஸ் aha தமிழ் OTT தளத்தில் வெளியாகவுள்ளது.

நடிகர் பிரசன்னாவுடன் இணைந்து பாடகர் எஸ்.பி.சரண் கனிகா தன்யா பாலகிருஷ்ணா மற்றும் பிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த புதிய வெப்சீரிஸின் படப்பிடிப்பு இன்று (ஜனவரி 18) பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.