தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வளர்ந்து வரும் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். தொடர்ந்து தனது இரண்டாவது திரைப்படத்தில் நடிகராகவும் அவதாரம் எடுத்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய நடித்து சமீபத்தில் வெளிவந்த லவ் டுடே திரைப்படம் தற்போது சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் பக்கா எண்டர்டெயின்மென்ட் திரைப்படமாக வெளிவந்திருக்கும் லவ் டுடே திரைப்படத்தை விமர்சன ரீதியாக பலரும் பாராட்டி வரும் நிலையில் ரசிகர்களும் ரிப்பீட் மோடில் திரையரங்குகளில் கண்டு ரசித்து வருகின்றனர். இதனை அடுத்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வரும் அடுத்த படங்கள் குறித்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

இதனிடையே இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் பழைய ஃபேஸ்புக் பதிவுகளை எடுத்து அதை வைத்து சமூக வலைதளங்களில் பல எதிர்மறை விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பலரும் பரப்பி வருகின்றனர். மேலும் சில ஃபேஸ்புக் பதிவுகளை போட்டோஷாப்பில் மாற்றி அதையும் பிரதீப் ரங்கநாதனின் பதிவு போலவே சித்தரித்து ட்ரோல் செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து மனம் திறந்து பதிலளித்துள்ள இயக்குனர் பிரதிப் ரங்கநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தற்போது வலம் வரும் பல பதிவுகள் போட்டோஷாப் செய்யப்பட்டவை. ஃபேஸ்புக் பக்கம் DEACTIVATE செய்யப்பட்டது. ஒரு வார்த்தை மாறினாலும் மொத்த அர்த்தமும் மாறுகிறது. இவற்றை செய்தவர்கள் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. மாறாக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், அவர்கள் தான்  என் மீது நேசம் கொண்டவர்களை எனக்கு காட்டி இருக்கிறார்கள். சில பதிவுகள் உண்மைதான்! ஆனால் தகாத வார்த்தைகளோடு இருக்கும் பதிவுகள் பொய்யானவை. நான் தவறுகள் செய்திருக்கிறேன்.. நாம் வளர்கிறோம் கற்றுக் கொள்கிறோம். நான் அவற்றை சரி செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இப்போதும் ஒரு நல்ல மனிதராக இருக்க தினமும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்” என இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் பதிவிட்டுள்ளார். இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் அந்த பதிவு இதோ…
 

A lot of posts that has been circulating has been photoshopped.The facebook account has been deactivated as even changing one word ,changes a lot of things. Im not angry on the people trying to change things, instead I thank them for showing me how much people support me .

— Pradeep Ranganathan (@pradeeponelife) November 16, 2022