பிரபுதேவா நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள பஹிரா என்ற திரைப்படத்தின் டீஸரை சற்றுமுன்னர் நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். த்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தின் டீஸர் தற்போது வைரலாகி வருகிறது. 

பத்துக்கும் மேற்பட்ட வித்தியாசமான கெட்டப்புகளில் பிரபுதேவா நடித்திருக்கும் இந்த படத்தில் அம்ரியா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் உள்பட பலர் நடித்துள்ளனர்

ஒவ்வொரு பெண்களையும் கொல்லும் சைக்கோ வேடத்தில் நடித்துள்ளார். குறிப்பாக டீஸரின் இறுதியில் சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே, உன்னை சிக்க வச்சு கொல்லுரேண்டி மயிலே என்று வசனம் பேசி கொலை செய்யும் காட்சி பலே. கணேசன் சேகர் இசையில் செல்வகுமார் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக அபிநந்தன், இசையமைப்பாளராக கணேசன் சேகர், எடிட்டராக ரூபன் உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே 50% படப்பிடிப்பை முடித்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டனர். ஆனால் அதன் பிறகு கொரோனா அச்சுறுத்தலால் இப்படத்தின் பணிகள் அனைத்தும் நின்றுபோனது.

இந்நிலையில் பஹிரா பட டீஸர் வெளியாவது குறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது: உற்சாகமாகவும் பதட்டமாகவும் உணர்கிறேன். எனது இரண்டாவது படத்தின் முடிவு தெரிந்து 3 நீண்ட வருடங்கள் ஆகியிருக்கிறது. அந்தக் கட்டத்தை தாண்டுவது பெரிய சவாலாக இருந்தது. நாளை என் வாழ்வில் முக்கியமான நாள். தனுஷ் அவர்கள் என் அடுத்த திரைப்படம் பஹிராவின் டீஸரை வெளியிடுகிறார். இந்த ஆதரவுக்கு நன்றி சொல்வது மட்டுமே போதாது சார். பஹிராவோடு மீண்டும் நான் களம் இறங்குகிறேன் என்று ஆதிக் கூறியிருந்தார்.