இந்திய திரையுலகில் நடன இயக்குனர். நடிகர் மற்றும் இயக்குனர் என பன்முக தன்மை கொண்ட கலைஞராக ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் நடிகர் பிரபுதேவா. முன்னதாக பல வித்தியாசமான கெட்டப்களில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள சைக்கோ த்ரில்லர் திரைப்படமான பஹீரா விரைவில் திரைக்கு வர உள்ளது.

தொடர்ந்து மாற்றுத்திறனாளியாக மிரட்டலான கதாபாத்திரத்தில், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இயக்குனர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள பொய்க்கால்குதிரை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்த வரிசையில் ஸ்டூடியோ கிரீன் சார்பில், தயாரிப்பாளர் K.E.ஞானவேல்ராஜா தயாரிப்பில் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம்  தேள். இயக்குனர் ஹரிகுமார் இயக்கத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து சம்யுக்தா, ஈஸ்வரி ராவ்,யோகிபாபு ஆகியோர் நடித்துள்ள தேள் படத்திற்கு விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்ய, சி.சத்யா இசையமைத்துள்ளார். 

வருகிற டிசம்பர் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் தேள் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத சில காரணங்களால் தேள் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாகவும் விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.