பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்ற நடிகர் பிரபாஸ்.இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகி ,இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தின.இதனை தொடர்ந்து பிரபாஸ் மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவான சாஹோ படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் சுமாரன வரவேற்பை பெற்றிருந்தது.

சாஹோ படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் படம் பிரபாஸ் 20.இந்த படத்தை ஜில் படத்தின் மூலம் பிரபலமான ராதாகிருஷ்ண குமார் இயக்குகிறார்.UV க்ரியேஷன்ஷுடன் இணைந்து கோபி கிருஷ்ணா மூவிஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.பூஜா ஹெக்டே இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார்.1970-ல் நடைபெறும் ரொமான்டிக் கதையாக இது இருக்கும் என்று தெரிகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் வெளிநாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.ராதே ஷ்யாம் என்று இந்த படத்திற்கு படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.தமிழ்,தெலுங்கு,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.கடந்த சில வருடங்களாக ஆக்ஷன் மோடில் இருந்த பிரபாஸ் இந்த படத்தில் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்குகிறார்.இதனை அடுத்து இவர் நடிக்கவுள்ள படம் பிரபாஸ் 21.

மகாநதி/நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார்.வைஜயந்தி மூவிஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.இந்த படத்தில் அரவிந்த்சுவாமி முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் தீபிகா படுகோனே ஹீரோயினாக நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியானது.முன்னதாக சாஹோ படத்தில் ஷ்ரத்தா கபூருடன் நடித்த பிரபாஸ் இந்த படத்தில் தீபிகா படுகோனுடன் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது பிரபாஸ் நடிக்கும் பிரபாஸ் 22 படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஓம் ராவத் இந்த படத்தை இயக்குகிறார்.பிரமாண்டமாக தயாராகவிருக்கும் இந்த படம் குறித்த அறிக்கையை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் அதில் கூறியுள்ளதாவது

டி சீரிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பூஷன் குமார், தன்ஹாஜி - தி அன்சங்க் வாரியர் பட இயக்குநர் ஓம் ராவத், ரெட்ரோஃபைல்ஸ் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் சூப்பர்ஸ்டார் பிரபாஸ் ஆகியோர் ஆதிபுருஷ் என்ற பிரம்மாண்ட 3டி படத்தில் இணைகின்றனர். இது தீமையை வெற்றிகொள்ளும் நன்மையை பற்றிய ஒரு இந்திய காவியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் திரைப்படம். 

ரெட்ரோஃபைல்ஸ் புரொடக்‌ஷன் நிறுவனரும் தன்ஹாஜி திரைப்படத்தின் இயக்குநருமான ஓம் ராவத், ஆதிபுருஷ் படத்தை இயக்குவதற்கான அற்புதமான ஆக்‌ஷன் செட்களும், நிகரில்லாத கிராபிக்ஸ்,  எந்தவித தடைகளும் இல்லாத உயர்தர திட்டங்களையும் கொண்டுள்ளார். அவரது நோக்கத்தை திரையில் கொண்டுவருவதற்காக பூஷன் குமார் (டி சீரிஸ்) அவருடன் இணைகிறார். பாகுபலி திரைப்படத்தில் மெகா வெற்றிக்கு பிறகு இந்த காவிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபாஸ் தயாராகி வருகிறார். 

இந்திய கலாச்சாரத்தின் மிகப் பிரபலமான அத்தியாயத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த பிரம்மாணட படைப்பு இந்தி மற்றும் தெலுங்கில் படமாகிறது. இந்த 3டி கொண்டாட்டம் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் பல வெளிநாட்டு மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட்டின் மிகப்பெரும் பிரபலங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்கான அறிவிப்பை மிக விரைவில் எதிர்பார்க்கலாம்.

ஆதிபுருஷ் படத்தை பற்றி பிரபாஸ் கூறும்போது, ‘ஒவ்வொரு கதாபாத்திரங்களும் சவால்கள் நிறைந்தது, ஆனால் இது போன்ற ஒரு கதாபாத்திரத்தை திரையில் கொண்டுவருவது மிகவும் பொறுப்புமிக்கது மற்றும் பெருமைக்குரியது. இயக்குநர் ஓம் விசேஷமாக வடிவமைத்துள்ள இந்த காவிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நான் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். நம் நாட்டின் இளைஞர்கள் தங்கள் அன்பை இப்படத்தின் மீது பொழிவார்கள் என்று உறுதியாக கூறுகிறேன்.’ என்றார். 

பூஷன் குமார் கூறும்போது, ‘இப்படம் என் இதயத்துக்கு நெருக்கமானது. நாங்கள் தயாரிக்கும் எல்லா படங்களும் எங்களோடு உணர்வுரீதியாக இணைந்திருக்கின்றன. ஆனால் ஓம் ஆதிபுருஷ் படத்தின் கதையை என்னிடம் கூறும்போது, ‘இந்த கனவு திட்டத்தில் பணியாற்றும் சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்று எனக்கு தோன்றியது. என்னுடைய தந்தை மற்றும் என் குடும்பத்தினரைப் போல நமது வரலாற்றின் மீதும், புராணங்களின் மீதும் எனக்கும் அதீத நம்பிக்கை உள்ளது. சிறு வயது முதலே அவற்றை கேட்டுத்தான் நாங்கள் வளர்ந்தோம். இந்த பிரம்மாண்ட படத்தின் நானும் ஒரு அங்கமாக இருக்கப் போகிறேன் என்று உடனடியாக எனக்கு தோன்றியது. தாங்கள் நம்பும் ஒரு கதையை பெரிய திரையில் அற்புதமான காட்சிகளுடனும், மகத்துவமான கதாபாத்திரங்களுடனும் காண பார்வையாளர்கள் தயாராக வேண்டும்.’ என்றார்.

இது குறித்து ஓம் ராவத் கூறும்போது, ‘இந்த படத்தில் நடிக்கவும் என்னுடைய நோக்கத்தையும் ஒப்புக்கொண்ட பிரபாஸுக்கும், என்னுடைய கனவு திரைப்படத்தை வெளியிட நிபந்தனையற்ற ஆதரவையும் வழங்கிய பூஷன் அவர்களுக்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். மிகப்பெரிய கனவுகளோடும், பெருமிதத்தோடும்,  இதற்கு முன் பார்த்திராத ஒரு அனுபவத்தை பார்வையாளர்களுக்கு தரும் உறுதியோடும் இந்த பயணத்தை தொடங்குகிறோம்’ என்றார்.

சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் படங்களுக்கு பிறகு பூஷன் குமார் பிரபாஸ் இணையும் மூன்றாவது படம் ஆதிபுருஷ். இயக்குநர் ஓம் ராவத்துடன் இணையும் முதல் படம். இந்த மூவர் கூட்டணி வெற்றிக்கான இலக்கணத்தை நிச்சயம் உருவாக்கும். 

பூஷன் குமார், க்ரிஷான் குமார், ஓம் ராவத், பிரசாத் சுடார் மற்றும் ராஜேஷ் நாயர் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றனர். 2021ஆம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 2022ஆம் ஆண்டு பிரம்மாண்ட முறையில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது