கடந்த 2011-ம் ஆண்டு லத்திகா எனும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சீனிவாசன். நிஜ வாழ்க்கையில் இவர் ஒரு மருத்துவர் என்றாலும், திரையுலகில் காமெடியன் கதாபாத்திரத்திலேயே நடித்தார். பவர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இவரது நடிப்பை கலாய்த்தாலும் அதனை கண்டு கொள்ளாமல் பல படங்களில் நடித்துள்ளார்.

புகழ்பெற்ற காமெடி நடிகரான பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. அதனால் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்படவில்லை.

இதற்கு முன் ஜனவரி மாதம், ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதால் இதே மருத்துவமனையில் பவர்ஸ்டார் அனுமதிக்கப்பட்டிருந்தார். பவர்ஸ்டார் சீனிவாசனும் ஒரு டாக்டர் தான். நடிக்க வருவதற்கு முன் இவர் சென்னை அண்ணாநகர் பகுதியில் கிளினிக் ஒன்றை நடத்தி வந்தார். இவர் லத்திகா என்ற படத்தை தானே தயாரித்து, அதன் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் பவர்ஸ்டார் என்ற கேரக்டரில் நடித்திருப்பார்.

இந்த படத்திற்கு பிறகு பவர்ஸ்டார் என்பது பட்டமாக மாறி போனது. சந்தானத்துடன் சேர்ந்து இவர் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் இவருக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதில் இவரது காமெடிக்கு பெரும் வரவேற்ப்பு கிடைத்தது. 

இந்த படத்தில் 3 ஹீரோக்களில் ஒருவராக பவர் ஸ்டாரும் நடித்திருந்தார். இந்த படத்தில் மற்றொரு ஹீரோவாக நடித்த சேதுராமனும் நிஜத்தில் ஒரு டாக்டர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பவர் ஸ்டார் விரைவில் பூரண நலமுடன் வீடு திரும்ப அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.