பிரபல வில்லன் நடிகர் சலீம் கவுஸ் காலமானார்!
By Anand S | Galatta | April 28, 2022 17:16 PM IST
இந்திய திரை உலகின் பிரபலமான வில்லன் நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் சலீம் கவுஸ். ஆரம்பக் கட்டத்தில் இந்தியில் பல படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்த சலீம் கவுஸ், தொடர்ந்து தி டிசீவர்ஸ் மற்றும் தி பர்ஃபெக்ட் மர்டர் உள்ளிட்ட ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த வெற்றிவிழா திரைப்படத்தின் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமான சலீம் கவுஸ், அடுத்தடுத்து விஜயகாந்தின் சின்ன கவுண்டர். சத்யராஜின் மகுடம், இயக்குனர் மணிரத்தினத்தின் திருடா திருடா, அஜித்குமாரின் ரெட் உட்பட பல திரைப்படங்களில் வில்லனாக மிரட்டியுள்ளார்.
குறிப்பாக தளபதி விஜயின் வேட்டைக்காரன் திரைப்படத்தில் வேதநாயகம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சலீம் கவுஸ் பேசிய “வேதநாயகம்னா... பயம்!” எனும் வசனம் இன்றளவும் பிரபலமாகவுள்ளது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் என பல்வேறு மொழித் திரைப்படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென இடம் பிடித்தவர் சலீம் கவுஸ்.
கடைசியாக தமிழில் நடிகை ஆண்ட்ரியா கதாநாயகியாக நடித்து விரைவில் ரிலீஸாக இருக்கும் “கா-THE FOREST” திரைப்படத்தில் வில்லனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் சலீம் கவுஸ் இன்று (ஏப்ரல் 28) காலமானார். அவருக்கு வயது 70.
வில்லன் நடிகர் சலீம் கவுஸ் மறைவுக்கு கலாட்டா குழுமம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. மேலும் இந்திய திரையுலகைச் சார்ந்த பல முன்னணி பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Actor #SalimGhouse Passed Away At 70!#RIPSalimGhouse #RIP #chinnagounder pic.twitter.com/PH09J1vQab
— nadigarsangam pr news (@siaaprnews) April 28, 2022