இந்தியத் திரையுலகில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் பிரம்மாண்டமான படைப்பாக தயாராகி வருகிறது பொன்னியின் செல்வன். தனது மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அல்லிராஜாவின் லைக்கா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து பொன்னியின் செல்வனை உருவாக்கி வருகிறார் இயக்குனர் மணிரத்தினம்.

இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் ஜெயமோகன் அவர்கள் பொன்னியின் செல்வன் வசனங்களை எழுதி உள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் முன்னணி கலை இயக்குனர் தோட்டா தரணியின் கலை இயக்கத்தில் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகர் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயராம், பிரபு, பிரகாஷ்ராஜ், பார்த்திபன், கிஷோர், அஷ்வின், நிழல்கள் ரவி, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, லால், சாரா அர்ஜுன் என மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளது. இவர்களோடு தற்போது மேலும் ஒரு முன்னணி நடிகர் இணைந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி வில்லன் நடிகர்களில் ஒருவர் பாபு ஆண்டனி. நடிகர் சத்யராஜ் கதாநாயகனாக நடித்த பூவிழி வாசலிலே படத்தில் வில்லனாக மிரட்டிய பாபு ஆண்டனியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என இந்திய திரை உலகின் பல்வேறு மொழிகளில் மிரட்டலான வில்லனாக அசத்தி வரும் பாபு ஆண்டனி தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

கடந்த 1990ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளிவந்த அஞ்சலி திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்த பாபு ஆண்டனி தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மணிரத்னத்தின் மணிரத்னத்தின் படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து நடிகர் பாபு ஆன்டனி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பரபரப்பாக நடைபெற்று வரும் பிரமாண்ட திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்திலிருந்து தொடர்ந்து அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.