தெலுங்கு திரை உலகின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் மகேஷ்.S.கொனேரு. முன்னணி தெலுங்கு நடிகர் ஜூனியர் NTR-ன் நெருங்கிய நண்பரான மகேஷ்.S.கொனேரு, ஜூனியர் NTR-க்கும் நந்தமூரி பாலகிருஷ்ணா அவர்களுக்கும் மக்கள் தொடர்பாளராக செயல்பட்டு வந்தவர்.

ஆரம்பத்தில் பத்திரிக்கையாளராக, திரைப்பட விமர்சகராக பிரபலமான மகேஷ்.S.கொனேரு, பின்னர் திரைப்படங்களுக்கான விளம்பர வடிவமைப்பில் களமிறங்கி, பாகுபலி உள்ளிட்ட படங்களுக்கு விளம்பர வடிவமைப்பும் செய்துள்ளார். தொடர்ந்து தனது ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் திரைப்படங்களை தயாரித்து வந்தார்.

முன்னதாக நடிகர் கல்யாண் ராம் நடித்த 118 படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான மகேஷ்.S.கொனேரு, தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த மிஸ் இந்தியா உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். கடைசியாக இவரது தயாரிப்பில் வெளிவந்த சபாக்கு நமஸ்காரம் திரைப்படம் இந்த ஆண்டு வெளியானது. 

மேலும் தளபதி விஜய் நடித்த பிகில் மற்றும் மாஸ்டர் ஆகிய படங்களை மகேஷ்.S.கொனேரு தெலுங்கில் விநியோகஸ்தராகவும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு மகேஷ்.S.கொனேரு திடீரென இன்று காலை காலமானார். 37 வயதே ஆன மகேஷ்.S.கொனேரு உயிரிழப்பு தெலுங்கு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னணி திரை பிரபலங்கள் அனைவரும் மகேஷ்.S.கொனேரு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.