தன் முகம் முழுக்க புன்னகையோடும் அழகான தமிழ் வர்ணனையோடும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் ஆனந்தக் கண்ணனுக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. சிங்கப்பூர் தமிழரான ஆனந்த கண்ணன் பிரபலமான தமிழ் தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை சிறப்பாக தொகுத்து வழங்கியுள்ளார்.

குறிப்பாக சன் மியூசிக்கில் தொகுப்பாளராக பணிபுரிந்த ஆனந்த கண்ணன் 90 கிட்ஸ்களின் ஃபேவரட் தொகுப்பாளர் ஆவார். சன் டிவியின் பிரபலமான சிந்துபாத் மெகா தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஆனந்த கண்ணன் தமிழ் சினிமாவிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் சில ஆண்டுகளுக்கு முன்பு தன் குடும்பத்திற்காக மீண்டும் சிங்கப்பூர் சென்று அங்கு வசித்து வந்தார். 

பின்னர் சிங்கப்பூரில் பிரபலமான சவால் சிங்கப்பூர் நிகழ்ச்சியை கிட்டத்தட்ட 2013ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டு வரை தொகுத்து வழங்கினார். நாட்டுப்புற கலைகள் மீது மிகுந்த ஆர்வமுடைய ஆனந்த கண்ணன் தனது தொகுப்பாளர் பணியை விட்டுவிட்டு நாட்டுப்புற கலைகளுக்கான பயிற்சி பட்டறைகள் மூலம் பலருக்கும் பயிற்சிகளை வழங்கியுள்ளார். 

இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சமீபகாலமாக மிகவும் அவதிப்பட்டு வந்த ஆனந்த கண்ணன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 48. மிகவும் பிரபலமான தொகுப்பாளரான ஆனந்த கண்ணனின் திடீர் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறை மற்றும் சின்னத்திரையை சார்ந்த பலரும் ஆனந்த கண்ணனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.