தமிழ் தொலைக்காட்சிகளில் பல பிரபலமான மெகா தொடர்களில் பல முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து சின்னத்திரை வாயிலாக தமிழ் மக்கள் ஒவ்வொருவரது வீட்டிலும் ஒரு நபராய் அறியப்பட்டவர் நடிகர் வேணு அரவிந்த். 1990களில் தூர்தர்ஷனில் வெளியான நிலாப்பெண் தொடரின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

தொடர்ந்து இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான காதல் பகடை காசளவு நேசம் ஆகிய தொடர்கள் நடிகர் வேணு அரவிந்த்-ஐ மிக பிரபலமடைய வைத்தது. தொடர்ந்து அலை ஓசை, வாழ்க்கை, இரண்டாம் சாணக்கியன் என பல தொடர்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக சன் டிவியில் வெளியாகி ரசிகர்களின் பேவரைட் மெகா தொடராக அறியப்பட்ட அலைகள் மெகா தொடரில் ரங்கராஜன் என்ற கதாபாத்திரத்தில் அசலான நடிப்பை வெளிப்படுத்தினார். அடுத்தடுத்து சிவமயம், செல்வி, அரசி, வாணிராணி, சந்திரகுமாரி என பல பிரபலமான சூப்பர் ஹிட் மெகா தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் வேணு அரவிந்த்.

இந்நிலையில் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேணு அரவிந்த் கொரோனாவிற்குப்பின் நிமோனியாவால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானார். தொடர்ந்து மூளையில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து நீக்கியதற்கு பின்னர் தற்போது கோமா நிலைக்கு சென்று உள்ளதாக கூறப்படுகிறது. 

எனவே தற்போது நடிகர் வேணு அரவிந்த் கோமா நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையின் முன்னணி நடிகர்களில் ஒருவரான வேணு அரவிந்த்  விரைவில் குணமடைந்து வர  சின்னத்திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும் மக்களும் வேண்டி வருகின்றனர்.