தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசன் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என சொல்லலாம். எத்தனையோ சீரியஸான கதாபாத்திரங்கள்  படத்திற்கு படம் புதுமையான தொழில்நுட்ப விஷயங்கள் நிகழ்கால அரசியல்,பகுத்தறிவு முற்போக்கு சிந்தனை கொண்ட   வசனங்கள் நம்மைத் தேம்பித் தேம்பி அழ வைக்கும் காட்சிகள் என எத்தனை செய்திருந்தாலும் நடிகர் கமல்ஹாசனின் நகைச்சுவைப் படங்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் எப்பொழுதும் உண்டு.

அதிலும் கிரேசி மோகன் கமல் ஹாசன் இணையும் திரைப்படங்கள் இன்று வரை வேறு எவராலும் தொட முடியாத நகைச்சுவை சாதனைகளை செய்துள்ளன. ஒரு திரைப்படத்தில் காட்சிக்கு காட்சி வசனத்துக்கு வசனம் வார்த்தைக்கு வார்த்தை நையாண்டியும் நகைச்சுவையும் கொட்டி நம்மை சிரித்து சிரித்து அழவைக்கும். ஒரு நகைச்சுவை காட்சியில் நாம் ஒரு வசனத்திற்கு சிரிக்க ஆரம்பித்து, வந்த சிரிப்பை நிறுத்துவதற்கு முன்பாக நான்கு நகைச்சுவை வசனங்கள் படபடவென விழுந்து தெறித்து விடும். ஒவ்வொரு முறையும் அதே நகைச்சுவைக் காட்சியை பார்க்கும் போதும் நாம் சிரிக்கக் கூடிய வகையில் காட்சிகளையும் வசனங்களையும் அமைக்க கூடிய வல்லவர்கள் கிரேசி மோகனும் கமலஹாசனும். 

அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் இணைந்த இக்கூட்டணி தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், சதிலீலாவதி, அவ்வைசண்முகி, காதலா காதலா, தெனாலி, பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம், வசுல்ராஜா என  சிரிப்பு சரவெடிகளால் நம்மை திணறடித்தது.கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் ஜெயராம் ,ஸ்ரீமன், ரமேஷ் அரவிந்த், யூகிசேது, சிம்ரன் மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்து வெளிவந்த பஞ்சதந்திரம் திரைப்படம் இன்றும்  நம்முடைய ஃபேவரட் லிஸ்டில் இருக்கிறது. 

பஞ்சதந்திரம் திரைப்படத்தின் பார்ட்-2 விற்காக தமிழ் சினிமா ரசிகர்கள் பல வருடங்களாக காத்திருக்கிறார்கள். அந்த வகையில், நடிகர் ஸ்ரீமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பஞ்சதந்திரம் பார்ட்-2வை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில்

"என்னிடம் பலரும் திரும்பத் திரும்ப கேட்கும் ஒரே கேள்வி பஞ்சதந்திரம் 2 எப்போது உருவாகும் என்பதே, அதற்கு எனக்கு தெரிந்த ஒரே பதில்  நம் உலகநாயகன் கமல்ஹாசன்  மட்டும் இதை முடிவு செய்துவிட்டால்  பஞ்சதந்திரம் 2 தயாராகிவிடும். அதற்காக தான் மொத்த படக்குழுவும் இது நடக்குமா நடக்காதா என்று உங்களைப் போலவே காத்துக்கொண்டு இருக்கிறோம்." 

என பதிவிட்டுள்ளார். தமிழ் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட நகைச்சுவை திரைப்படங்களில் முக்கிய இடத்தில் இருக்கும் பஞ்சதந்திரம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில்  தயாராக வேண்டும் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் இன்றும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.