தமிழ் சினிமாவின் பிரபல குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான நடிகர் ராமு இயக்குனர் சசி இயக்கத்தில் வெளிவந்த பூ திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பிரபலமடைந்தார். அன்று முதல் பூ ராமு என அழைக்கப்படும் இவர் தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.

குறிப்பாக இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த சூரரைப்போற்று திரைப்படத்தில் நடிகர் சூர்யாவின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்த பூ ராமு, இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் கல்லூரி பிரின்ஸ்பல் கதாபாத்திரத்திலும் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கர்ணன் திரைப்படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்து கவனத்தை ஈர்த்தவர்.

மேலும் கமல்ஹாசனின் அன்பே சிவம், இயக்குனர் ராமின் தங்க மீன்கள், தளபதி விஜயின் ஜில்லா, அஜித்குமாரின் வீரம் உள்ளிட்ட படங்களிலும் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். இதனிடையே நடிகர் பூ ராமு இன்று ஜூன் 27-ம் தேதி மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நடிகர் பூ ராமு உயிரிழந்ததாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் பூ ராமுவின் மறைவுக்கு கலாட்டா குழுமம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் திரை பிரபலங்களும் தமிழக சினிமா ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
 

#JUST_IN : பிரபல குணச்சித்திர நடிகர் "பூ ராமு" உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் காலமானார். #RIPPooRamu #PooRamu pic.twitter.com/KKaYyoJAZn

— Galatta Media (@galattadotcom) June 27, 2022