தமிழ் திரையுலகின் பிரபல கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அருள்நிதி. தனக்கே உரித்தான பாணியில் ஆக்ஷன் த்ரில்லர், கிரைம் த்ரில்லர், ஹாரர் த்ரில்லர் & சைக்கலாஜிக்கல் த்ரில்லர் என தொடர்ந்து வித்தியாசமான த்ரில்லர் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த வரிசையில் அடுத்தடுத்து மூன்று த்ரில்லர் திரைப்படங்கள் அருள்நிதியின் நடிப்பில் வெளிவரவுள்ளன. முன்னதாக இயக்குனர் இன்னசி பாண்டியன் இயக்கத்தில் டைரி திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் தேஜாவு திரைப்படத்திலும் நடித்து வருகிறார் அருள்நிதி.

மேலும் தமிழகத்தின் பிரபல யூடியூப் சேனலான எருமசாணி யூடியூப் சேனல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த விஜயகுமார் ராஜேந்தரன் இயக்குனராக களமிறங்கும் D BLOCK எனும் திரில்லர் திரைப்படத்திலும் அருள்நிதி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் அருள்நிதிக்கு குழந்தை பிறந்துள்ளது.

முன்னதாக நடிகர் அருள்நிதி-கீர்த்தனா தம்பதிக்கு மகிழன் எனும் மகன் இருக்கிறார். தற்போது 2-வதாக அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து நடிகர் அருள்நிதி தனது ட்விட்டர் பக்கத்தில், “எங்களது அன்பிற்குரிய குட்டி தேவதையை வரவேற்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.எனவே நடிகர் அருள்நிதிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.