மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் ஊர்வசி இணைந்து நடித்து த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற பத்தாமுதயம் திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானவர் ரமேசன் நாயர். தொடர்ந்து மலையாள சினிமாவில் மம்முட்டி ,மோகன்லால், திலீப் ,ஜெயராம் என முன்னணி நடிகர்களின் பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.
 
கிட்டத்தட்ட 170க்கும் மேற்பட்ட மலையாள  திரைப்படங்களில் பாடல்களை எழுதியுள்ள கவிஞர் ரமேசன் நாயர் 3000-க்கும் மேற்பட்ட பக்தி பாடல்களையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள திரை இசை பாடல்கள் மற்றும் பக்தி பாடல்களை தவிர மலையாள இலக்கியத் துறையிலும் சிறந்து விளங்கியவர் ரமேஷன் நாயர். 

பல கவிதை தொகுப்புகளையும் இலக்கியங்களிலும் உருவாக்கிய  ரமேசன் நாயர், அவரது படைப்புகளுக்காக கேரளாவில் சாகித்திய அகாடமி விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் ரமேசன் நாயர், தமிழில் உயரிய நூலாகத் திகழும் திருக்குறள் மற்றும் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் உள்ளிட்ட நூல்களை மலையாளத்தில் மொழி பெயர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் 73 வயதான கவிஞர் ரமேசன் நாயர் இன்று உயிரிழந்துள்ளார்.பாடலாசிரியர் ரமேஷன் நாயர் மறைவுக்கு பிரபல பாடகி K.S.சித்ரா இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,

"கவிஞர் ரமேசன் நாயரின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர் எழுதிய பல திரை பாடல்களைப் பாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது திரைப்பாடல்களை விட அதிகமாக நான்  பல பக்திப் பாடல்களையும் அவர் எழுதி நான் பாடியதை என்னால் மறக்க முடியாது அவரை பிரிந்து வாடும் அவர் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்"

என K.S.சித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.கவிஞர் ரமேசன் நாயரின் மறைவுக்கு மலையாள திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by K S Chithra (@kschithra)