பாலிவுட்டில் வெளியான ஃப்ருட் அன்ட் நட் என்ற திரைப்படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான நீத்தி மோகன், தொடர்ந்து வெளியான ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற பாலிவுட் திரைப்படத்தில் “இஷ்க் வாலா லவ்”  என்ற பாடலை பாடியதன் மூலம் மிகுந்த பிரபலம் அடைந்தார். 

ஹிந்தி தமிழ், தெலுங்கு,  கன்னடம், பெங்காலி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ள நீத்தி மோகன் இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் இசையில் வெளிவந்த பில்லியன் டாலர் ஆம் என்ற ஹாலிவுட் திரைப்படத்திலும் பாடியுள்ளார்.தமிழில் ஐ திரைப்படத்தில் வந்த “மெர்சலாயிட்டேன்”,  நானும் ரவுடி தான் படத்தில் இடம்பெற்ற “நீயும் நானும்”,  தெறி படத்தில் இடம்பெற்ற “செல்லக்குட்டி” என தமிழிலும் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

நிஹர் பாண்ட்யாவை  திருமணம் செய்துகொண்ட நீத்தி மோகனுக்கு  தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் தன் கணவரோடு எடுத்துக் கொண்ட ஒரு அழகான புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு, 

“நானும் என் கணவர் நிஹர் பாண்ட்யாவும்  மிகுந்த மகிழ்ச்சியோடு எங்கள் செல்ல மகனை எங்கள் குடும்பத்திற்குள் நேற்று வரவேற்றோம். என் கைகளில் அந்த பிஞ்சு குழந்தையை தாங்கி கொண்டு இருப்பது மிக அழகான உணர்வாக இருக்கிறது. இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எங்கள் மீது அன்பைப் பொழிந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” 

எனக் குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார்.  குழந்தையைப் பெற்றெடுத்த பிரபல பாடகி நீத்தி மோகனுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.