பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான போமன் இரானி எவ்ரிபடி சேஸ் ஐ அம் ஃபைன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில்   போமன் இரானி நடித்த முன்னாபாய் எம்பிபிஎஸ் திரைப்படம் இந்தியா முழுக்க இவரை பிரபலமடைய செய்தது. இத்திரைப்படம் பின்னர் நடிகர் கமல்ஹாசன் மற்றும் பிரகாஷ்ராஜ் இணைந்து நடித்து வசூல்ராஜா எம்பிபிஎஸ் என தமிழில் ரீமேக் ஆனது. 

அதேபோல ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் நடிகர் அமீர்கான் மாதவனுடன் இணைந்து போமன் இரானி நடித்த 3 இடியட்ஸ் திரைப்படம் உலகம் முழுக்க மெகா ஹிட்டானது.3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கான நண்பன் திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்க தளபதி விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் மூவரும் இணைந்து நடித்திருந்தனர். ஹிந்தியில் பொம்மன் இரானி நடித்த முக்கியமான பிரின்ஸ்பல் கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடித்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் நடிகர் போமன் இரானியின் தாயார் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இதனைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நடிகர் போமன் இரானி தெரிவித்துள்ளார்.அந்தப் பதிவில், “இன்று அதிகாலை தூக்கத்தில்  தாயார் இரானி சாந்தமாக இயற்கை எய்தினார்” என தெரிவித்துள்ளார். மேலும், “தாயார் இராணி சினிமா பார்ப்பதற்காக தன்  பையிலிருக்கும் சிறிதளவு காசையும் என் கை நிறையக் கொடுத்து அனுப்புவார் மேலும்  எங்கள் காம்பவுண்டில் குடியிருக்கும் மற்ற சிறுவர்களையும் என்னோடு சினிமா பார்க்க அனுப்புவார். “மறக்காமல் பாப்கான் வாங்கிக்கொள்ளுங்கள்” என்று சொல்லுவார்” என தாயாரின் நினைவுகளை பகிர்ந்தார்.

மேலும் , “மக்கள்  உன்னை புகழ்வதால்  நீ நடிகன் ஆகிவிட முடியாது , நீ எப்போது மக்களை சிரிக்க வைத்து மகிழ்விக்கிறாயோ அப்போதுதான் நீ நடிகன்” என அவர் தாயார் எப்போதும் சொல்வதை அவர் இன்று நினைவுகூர்ந்தார். “நேற்று எனது தாயார் மலாய் குல்பி மாம்பழமும் கேட்டார். இரவு நட்சத்திரங்களையும் நிலாவை காண வேண்டும் என்று விரும்பினார். நேற்றும்...இன்றும்... என்றும்... அவர் ஒரு நட்சத்திரம் தான்!” என  போமன் இரானி பகிர்ந்துள்ளார். போமன் இரானியின் தாயார் மறைவுக்கு இந்திய திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.