தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்த டப்பிங் ஆர்டிஸ்ட் ரவீனா ரவி, தமிழில் இயக்குனர் சமுத்திரக்கனி நடித்த சாட்டை திரைப்படத்தில் மஹிமா நம்பியார்-க்கு பின்னணி குரல் கொடுத்ததன் மூலம் டப்பிங் ஆர்டிஸ்டாக அறிமுகமானார்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் அமலாபால், ஸ்ரீதிவ்யா, சமந்தா, எமி ஜாக்சன், காஜல் அகர்வால், கேத்தரின்தெரசா, ரெஜீனா கெஸன்ட்ரா, நிக்கிகல்ராணி, மடோனா செபாஸ்டின், ராஷி கண்ணா, மாளவிகா மோகனன் மற்றும் மஞ்சிமா மோகன் உட்பட பல முன்னணி கதாநாயகிகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

டப்பிங் கலைஞராக மட்டுமல்லாமல் நடிகையாகவும் ஒரு கிடாயின் கருணை மனு & காவல்துறை உங்கள் நண்பன் ராக்கி உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள ரவீனா ரவி மலையாளத்திலும் நித்யர்த்த நாயகன் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகில் முன்னணி டப்பிங் கலைஞரும் நடிகையுமான ரவீனா ரவியின் தந்தை திடீரென காலமானார். ரவீனா ரவியின் தந்தையான ரவீந்திரநாத் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரவீனா ரவியின் தந்தை மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.