பாலிவுட்டில் வெளியான மெட்ராஸ் கபே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ராசி கண்ணா தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ,மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ,புகழ் பெற்ற பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் மற்றும் அதர்வா நடித்து வெளிவந்த இமைக்காநொடிகள் சூப்பர்ஹிட் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்  ராசி கண்ணா. 

அடுத்ததாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள  துக்ளக் தர்பார் திரைப்படத்திலும்  ராசி கண்ணா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பிறகு நடிக்க உள்ள சர்தார் திரைப்படத்திலும் இயக்குனர் சுந்தர் சி யின் அரண்மனை 3 திரைப்படத்திலும் ராசி கண்ணா நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் அனைவரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பல மாநிலங்களிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது காரணமாக சாலை ஓரங்களில் ஆதரவற்று இருக்கும் மக்களுக்கு தேவையான உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 

இதனை போக்கும் விதமாக பல தன்னார்வத் தொண்டு  அமைப்புகளும் அரசாங்கமும் உதவி செய்துவரும் நிலையில் தென்னிந்தியாவின் பிரபல கதாநாயகிகளில் ஒருவராக விளங்கும் ராசி கண்ணாவும் தெருவில் இறங்கி உதவி செய்துள்ளார்.ஹைத்ராபாத்தில் ஆதரவற்று சாலையோரங்களில் பசியில் வாடும் ஏழை மக்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை அளித்து நிவாரண உதவிகளை செய்து வருகிறார் நடிகை ராசி கண்ணா. 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை ராசி கண்ணா “இப்போது இல்லாவிட்டால் எப்போது... நம்மை விட்டால் வேறு யார்” என்று குறிப்பிட்டு இதற்காக உடனிருந்து உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். நடிகை ராசி கண்ணாவின் இந்த செயலுக்கு நாடு முழுவதும் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.