பிருத்விராஜ், பிஜு மேனன் நடித்து மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான திரைப்படம், அய்யப்பனும் கோஷியும். மறைந்த இயக்குனர் சச்சி இயக்கி இருந்த இந்தப் படம் திரை ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்தது. பிருத்விராஜ் முன்னாள் ராணுவ வீரராகவும் பிஜூ மேனன் சப் இன்ஸ்பெக்டராகவும் நடித்திருந்தனர். ரஞ்சித், கவுரி நந்தா, அன்னா ராஜன், அணில் நெடுமங்காடு உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் ஓடிக் கொண்டிருந்தபோதுதான் கொரோனா பரவல் தீவிரமடைந்தது.

அதிகாரப் பின்னணி கொண்ட ஒருவனுக்கும் ஆதிவாசிப் பகுதியைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டருக்குமான ஈகோ மோதல்தான் படத்தின் கதை. படத்தை எவ்வளவு இயல்பாக கொடுக்க முடியுமோ, அவ்வளவு யதார்த்தமாக எடுத்திருந்தார்கள். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை, தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் வாங்கியுள்ளார். இவர், பொல்லாதவன், ஆடுகளம், ஜிகிர்தண்டா உட்பட சில படங்களைத் தயாரித்தவர். 

தமிழ் ரீமேக்கில் நடிகர் சசிகுமார் ஒரு கேரக்டரில் நடிக்கிறார். மற்றொரு கேரக்டரில் நடிப்பவர் முடிவாகவில்லை என்று தயாரிப்பாலர் கதிரேசன் கூறியிருந்தார். இந்நிலையில் தெலுங்கு ரீமேக் உரிமையை, சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெற்றிருக்கிறது.  இதில் பவன் கல்யாண் மற்றும் ராணா நடிப்பது உறுதியாகி இருக்கிறது. 

பிருத்விராஜ் கேரக்டரில் ராணாவும், பிஜு மேனன் கேரக்டரில் பவன் கல்யாணும் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சாகர் சந்திரா படத்தை இயக்குகிறார். இவர் இதற்கு முன், அப்பட்லோ ஒகடுண்டவடு என்ற படத்தை இயக்கி இருந்தார். தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். பிரசாத் முரெல்லா ஒளிப்பதிவு செய்கிறார். நவின் நூலி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். 

இந்நிலையில் படக்குழுவினர் ராணா டகுபதியை வரவேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இரண்டு உச்ச நட்சத்திரங்கள் ஒரே படத்தில் நடிப்பதை காண ஆவலில் உள்ளனர் திரை விரும்பிகள். வக்கீல் சாப் படத்திற்கு பவன் கல்யாண் நடிக்கும் இந்த படத்தில் நடிப்பதால் குஷியில் உள்ளனர் அவரது ரசிகர்கள். 

ராணா கைவசம் காடன் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகியுள்ளது. ராணாவுடன் இணைந்து விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஈராஸ் நிறுவனம் தயாரித்த இந்த படம் பொங்கல் 2021-ல் திரைக்கு வருகிறது.