பரபரப்பான சூழலில் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நிறைய முறைகேடுகள் நடைபெற்றதாக வழக்கு தொடரப்பட்டு மூன்று ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நடைபெற்ற தேர்தல் செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனையடுத்து 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் வாக்குகள் இன்று மார்ச் 20ஆம் தேதி 2022ஆம் ஆண்டு எண்ணப்பட்டன. நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர்கள் அணியும் இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் சுவாமிகள் அணியும் இரண்டு அணிகளாக தேர்தலில் போட்டியிட்டனர்.

இதில் பாண்டவர்கள் அணியில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் போட்டியிட்டனர். சங்கரதாஸ் சுவாமிகள் அணியில் தலைவர் பதவிக்கு பாக்கியராஜ் பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ் பொருளாளர் பதவிக்கு பிரசாந்த் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கு குட்டி பத்மினி மற்றும் உதயா ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில் பாண்டவர்கள் அணியினர் அபார வெற்றி பெற்றுள்ளனர். நாசர், கார்த்தி, விஷால், பூச்சி முருகன், கருணாஸ் என முக்கிய பொறுப்புகளுக்கு போட்டியிட்ட அனைவரும் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று முடிவுகள் வெளியான நிலையில் எதிர அணியினர் தொடர்ந்து தேர்தல் முறைகேடுகள் குறித்த கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.