நீலம் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் கலையரசன், அஞ்சலி பாட்டீல் நடித்துள்ள படம் குதிரைவால். இந்த படத்தை பா.ரஞ்சித் வெளியிடுகிறார். வழக்கமான படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் - ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இயக்கியுள்ளனர். பிரதீப் குமார் மற்றும் மார்ட்டின் விஸ்ஸர் இசையமைத்துள்ளனர். 

படத்தின் கதையை ராஜேஷ் எழுதியிருக்கிறார். உளவியல், ஆள் மன கற்பனைகள் , மற்றும் டைம் டிராவல் குறித்த ஒரு அறிவியல் புனைவுப்படமாகவும், வழக்கமான சினிமாவிலிருந்து மாறுபட்டதாகவும் இருக்கும் என படக்குழு தெரிவித்தது. மேலும், தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் இது ஒரு புதிய முயற்சியாகவும், புதிய அனுபவத்தைக் கொடுக்கும் விதமாகவும் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர். 

படத்தின் பெரும்பாலான காட்சிகள் கிராபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. யாழி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டீசர்  கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி வெளியாகி சமூக வலைதளத்தில் சக்கை போடு போட்டது. அறிவியல் புனைக்கதையில் அரசியல் வசனங்களும் இடம்பெற்று கவனத்தை ஈர்த்தது.

2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதியிலிருந்து 19 ஆம் தேதிவரை திருவனந்தபுரத்தில் கேரள அரசின் கலாச்சார விவகாரங்கள் துறையால் நடத்தப்படும் கேரள சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய பிரிவில் திரையிட தேர்வாகியிருக்கிறது. சமீபத்தில் இத்தகவலை படக்குழு உற்சாகமுடன் பகிர்ந்துகொண்டனர். 

இந்நிலையில் இப்படத்திற்கு கூடுதல் அங்கீகாரம் கிடைத்துள்ளது. பெர்லின் கிரிட்டிக் வீக் என்ற சர்வதேச திரைப்பட விழாவிற்கும் குதிரை வால் தேர்வாகியுள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை தயாரிப்பாளர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பொன்னான நேரத்தில் படக்குழுவினரை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா. 

சென்ற ஆண்டு லாக்டவுனில் கெளதம் மேனன் இயக்கிய ஒரு சான்ஸ் குடு பெண்ணே பாடலில் நடித்திருந்தார் கலையரசன். ஷாந்தனு, மேகா ஆகாஷ் நடித்த இந்த பாடல் ஆல்பம் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. இதைத்தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் படத்திலும் முக்கிய ரோலில் நடித்துள்ளார் கலையரசன். 

இதைத்தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கத்த்தில் உருவாகி வரும் சார்பட்ட பரம்பரை படத்திலும் ஆர்யாவுடன் இணைந்து முக்கிய ரோலில் நடித்துள்ளார்.