கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட்டு படமாகிறது இதை மணிரத்னம் இயக்குகிறார். கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிக்க உள்ளனர் என்ற தகவல் தெரியவந்தது. இவர்களுடன் ஜெயராம் , லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில்  நடிக்கவுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ள இந்த படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். 

தாய்லாந்தில் உள்ள வனப்பகுதிகளில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இதைத்தொடர்ந்து சென்னை பாண்டிச்சேரியில் நடந்த படப்பிடிப்பிற்கு பிறகு ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டிக்கு விரைந்தனர்.கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுனுக்கு முன்னரே இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. 

தற்போது பொன்னியின் செல்வனில் நடிகர் நிழல்கள் ரவி ஒப்பந்தமாகியிருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. இதை அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தான் சின்ன பழுவேட்டரையர் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக அவர் கூறியிருக்கிறார். தான் நடிக்க வேண்டிய பகுதிகளின் ஷூட்டிங் கடந்த பிப்ரவரி மாதமே துவங்கி இருக்க வேண்டும் எனக் கூறிய அவர், கொரோனா காரணமாக அது தடைப்பட்டது என கூறியுள்ளார். அடுத்த கட்ட ஷூட்டிங் மத்திய பிரதேசத்தில் நடத்த மணிரத்தினம் திட்டமிட்டு இருந்தார் என்றும் நிழல்கள் ரவி தெரிவித்திருக்கிறார். 

வரும் அக்டோபர் மாதம் முதல் மீண்டும் ஷூட்டிங் துவங்க வாய்ப்புள்ளது என்றும் நிழல்கள் ரவி தெரிவித்திருக்கிறார். பூனேவில் ஷூட்டிங் துவங்க படக்குழு திட்டமிட்டு வருகிறது என சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா காலகட்டத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் நடத்துவது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என மணிரத்னம் ஒரு பேட்டியில் முன்பு கூறி இருந்தார். காரணம் இது வரலாற்று படம் என்பதால் அதிக அளவு துணை நடிகர்கள் தேவைப்படுவார்கள். ஒவ்வொரு காட்சியிலும் சில நூறு பேர் இருப்பது போலத்தான் இருக்கும். அதனால் இனி ஷூட்டிங் நடத்துவது பெரிய சவால் என மணிரத்னம் தெரிவித்து இருந்தார். 

மேலும் அரசு தற்போது விதித்திருக்கும் கட்டுப்பாடுகளில் ஒவ்வொரு நபருக்கும் 6 அடி இடைவெளி விட்டு ஷூட்டிங் நடத்த வேண்டும், உடைகள் உள்ளிட்ட எதையும் பகிரக் கூடாது, மேக்கப் கலைஞர்கள் PPE அணிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் பொன்னியின் செல்வன் ஷூட்டிங் எப்போது மீண்டும் துவங்கும் என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே உறுதியாகும்.