ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் அந்தாதூன். 2018-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதுகளையும் வென்றது.

இந்தப் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. தெலுங்கில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் நிதின், தபு கதாபாத்திரத்தில் தமன்னா, ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் நபா நடேஷ் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமானார்கள்.

மெர்லபாகா காந்தி இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு துபாயில் தொடங்கப்பட்டுள்ளது. இதனை நிதின் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இது நிதின் நடிப்பில் உருவாகும் 30-வது படமாகும். தாகூர் மது வழங்க சுதாகர் ரெட்டி மற்றும் நிகிதா ரெட்டி இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள். இசையமைப்பாளராக மஹதி ஸ்வர சாகர் மற்றும் ஒளிப்பதிவாளராக ஹரி கே வேதாந்த் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். 

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றி தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்தாதூன் தமிழ் ரீமேக்கில் டாப் ஸ்டார் பிரசாந்த் நாயகனாக நடிக்கவுள்ளார். அவருடன் இணைந்து நடிக்கும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

இந்த படத்தை பொன்மகள் வந்தாள் இயக்குனர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கவுள்ளார். இந்த படத்திற்காக பிரசாந்த் பல ட்ரைனிங் செய்து வந்தார் என்றும். படத்திற்காக 23 கிலோ உடல் எடையை பிரசாந்த் குறைந்துள்ளார் என்றும் செய்திகள் வெளியானது. விரைவில் படம் பற்றியும், படக்குழு பற்றியும் தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.