நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. முயற்சிகள் ஒருபுறம் இருக்க, வைரஸின் தாக்கம் வேகமாக இருக்கிறது. இந்த தொற்று காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. தினசரி செய்தி சேனல்களை ஆன் செய்தால் கொரோனா பற்றிய செய்திகள் தான் அதிகம். இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. அனைத்து தரப்பினரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன் நடிகர் அமிதாப்பச்சனின் குடும்பத்தினர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டனர். டெஸ்டில் நெகட்டிவ் வந்தவுடன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இரண்டு நாட்களுக்கு முன் தனது உடல் நிலை குறித்து நடிகர் கருணாஸ் மருத்துவமனையிலிருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். கொரோனாவிலிருந்து மீண்டது குறித்து நேற்று இயக்குனர் SS ராஜமௌலி பதிவு ஒன்றை செய்திருந்தார்.  

இந்நிலையில் நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து அவரும் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் கடந்த வாரம் எனக்கு கொரோனா பாசிட்டிவ் என பரிசோதனையில் வந்தது. இப்போது என் உடல் நிலை நன்றாக உள்ளது. குணமடைந்து வருகிறேன். என்னைத் தேடிய எனது நெருங்கிய நபர்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். அனைத்து முன்னணி சுகாதார பணியாளர்களுக்கும், சென்னை கார்ப்பரேஷனுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என பதிவு செய்துள்ளார். 

ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்த டார்லிங் படத்தின் மூலமாக ஹீரோயினாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. அந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நிக்கி கல்ராணிக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல புகழ் கிடைத்தது. 

அதற்கு பிறகு அவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மொட்ட சிவா கெட்ட சிவா, கலகலப்பு 2, ஹர ஹர மஹாதேவகி என அவர் தொடர்ந்து படங்கள் நடிப்பதால் தமிழ் சினிமாவில் பிஸியான நடிகைகளில் ஒருவராக கடந்த சில வருடங்களாக இருந்து வருகிறார். மேலும் மரகத நாணயம் என்ற படத்தில் அவர் ஆதி உடன் நடித்திருந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிக்கி கல்ராணி விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.