கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நிஹாரிகா கொனிடெலா. ஆறுமுகக்குமார் இயக்கிய இந்த படத்தில் விஜய்சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடிப்பில் அசத்தியிருப்பார் நிஹாரிகா. தெலுங்கு சூப்பர்ஸ்டாரான நடிகர் சிரஞ்சீவியின் தம்பி, நாகபாவுவின் மகள். இதனால் இவரை பெரிய குடும்பத்து நடிகை என்று டோலிவுட்டில் கூறி வருகின்றனர். 

தயாரிப்பாளராகவும் இருக்கும் நிஹரிகா, 2016-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான, ஒக்க மனசு மூலம் சினிமாவில் அறிமுகமானவர். ஹேப்பி வெட்டிங், சூர்யகாந்தம், சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார். பிங்க் எலிபன்ட் பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இப்போது தமிழில் அசோக் செல்வன் ஜோடியாக புதிய படம் ஒன்றில் நடிக்க இருந்தார். ஸ்வாதினி இயக்கும் இந்தப் படத்தில் இருந்து, திருமணம் காரணமாக அவர் விலகினார். நிஹாரிகாவுக்கும் ஐதராபாத்தைச் சேர்ந்த பொறியாளர் சைதன்யா என்பவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டிருந்தது.

திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஆகஸ்ட் மாதம் நடந்தது. கொரோனா பரவல் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர். இதில் நடிகர் சிரஞ்சீவி, ராம்சரண் தேஜா, அல்லு அர்ஜூன் உள்பட அவர்கள் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

திருமணம் டிசம்பர் மாதம் நடக்கிறது. ஐதராபாத்தில் எளிமையாக நடக்கும் என்று முதலில் கூறப்பட்டது. இந்நிலையில் இவர்கள் திருமணம் நடக்கும் இடம் மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கோவாவில் நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சைதன்யா மற்றும் தோழிகளுடன் கோவா சென்று இருந்தார் நிஹாரிகா. அங்கு திருமணத்துக்காக ரிசார்ட் ஒன்றை பார்த்துவிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இவர்கள் திருமணம் கோவாவில் நடக்க இருக்கிறது. இதில் சிரஞ்சீவி குடும்பத்தினர் கலந்துகொள்ள இருக்கின்றனர். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.