மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நஸ்ரியா நஸிம். அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கிய நேரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படம் கவனிக்கப்பட்டதை அடுத்து வாய்ப்புகள் அதிகரித்தன. அட்லி இயக்கிய ராஜா ராணி, தனுஷின் நய்யாண்டி, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

கடந்த 2014 ஆம் ஆண்டு பிரபல மலையாள நடிகர் ஃபகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு அதிகப் படங்களில் நடிக்காமல் இருந்த நஸ்ரியா, வரதன், கும்ப்ளாங்கி நைட்ஸ் உள்பட சில படங்களை தயாரித்தார். கடைசியாக அவர் ட்ரான்ஸ் என்ற படத்தில், ஃபகத் பாசிலுடன் நடித்திருந்தார். 

இதையடுத்து அவர் தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். தெலுங்கில் அவர் நடிப்பது இதுதான் முதன்முறை. திருமணத்துக்குப் பிறகு ஹீரோயினாக நஸ்ரியா நடிக்கும் முதல் படமும் இதுதான். இதில், நானி ஹீரோவாக நடிக்கிறார். விவேக் ஆத்ரேயா இயக்குகிறார். 

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் கணக்கு நேற்றிரவு ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதை நடிகை நஸ்ரியா உறுதிப்படுத்தி உள்ளார். அதில், என்னுடைய இன்ஸ்டா கணக்கை சில ஜோக்கர்கள் முடக்கி உள்ளனர். சில நாட்களுக்கு என் கணக்கில் இருந்து வரும் மெசேஜ்களுக்கு எந்த பதிலும் சொல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். 

கடந்த சில மாதங்களாக, பிரபலங்களின் சோஷியல் மீடியா கணக்குகளை குறிவைத்து சிலர் முடக்கி வருகின்றனர். சமீபத்தில் வரலட்சுமி சரத்குமாரின் சோஷியல் மீடியா கணக்கை சிலர் முடக்கினர். பின்னர் அது மீட்கப்பட்டது. அதே போல் பிரபலங்களின் பெயரில் அக்கௌன்ட்டுகளை உருவாக்கி அதிலிருந்து காஸ்டிங் கால் மோசடி, நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பணம் மோசடி போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள் மர்ம நபர்கள்.