தமிழ் திரையுலகில் எதார்த்த படைப்புகளின் மூலம் திரை ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இயக்குனர் அல்லாது பாடலாசிரியர், நடிகர் என பன்முக திறமையுள்ளவர். இவரது இயக்கத்தில் வெளிவந்த நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார். நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தை தயாரிக்கவுள்ளார் விக்னேஷ் சிவன். 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் ஹீரோயினாக நடித்தார் நயன்தாரா. அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. தொடர்ந்து இருவரும் லிவிங் டுகெதரில் வசித்து வருகின்றனர். இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்துவிட்டதாக அவ்வப்போது வதந்திகள் பரவுவதை பார்க்க முடிகிறது. இருப்பினும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் கூலாக இருந்து வருகின்றனர் விக்கி மற்றும் நயன்தாரா. 

கொரோனா காரணமாக படப்பிடிப்பு ஏதும் இல்லாமல் இருக்கும் விக்னேஷ் சிவன், சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இவர் இயக்கத்தில் உருவான வெப் சீரிஸின் போஸ்ட் ப்ரோடக்ஷன்ஸ் மற்றும் டப்பிங் பணிகளை நிறைவு செய்தார். இயல்பு நிலை திரும்பியவுடன் இந்த வெப் சீரிஸ் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்நிலையில் நடிகை நயன்தாரா ஓணம் பண்டிகையை கொண்டாட தனது சொந்த ஊரான கேரளாவுக்கு சென்றுள்ளார். இருவரும் தனி விமானம் மூலம் கொச்சின் விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர். அவர்கள் இருவரும் விமானத்தில் இருந்து இறங்கி நடந்து செல்லும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா லாக்டவுன் காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் இருவரும் தனி விமானம் மூலம் சென்றுள்ளது போல் தெரிகிறது. 

இயல்பு நிலை திரும்பியவுடன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் உருவாகவுள்ளது. விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்கவிருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கவுள்ளனர். காதலர் தினத்தன்று இதன் அறிவிப்பு வெளியானது. விரைவில் அதன் ஷூட்டிங் தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார்.