கடந்த ஆண்டு மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக லவ் ஆக்‌ஷன் டிராமா படத்தில் நடித்திருந்த நயன்தாரா, தற்போது அப்பு என்.பட்டாதிரி இயக்கத்தில் உருவாகும் நிழல் படத்தில் குஞ்சாகா போபன் உடன் நடிக்கிறார். பல்வேறு படங்களுக்கு எடிட்டராக பணியாற்றி கேரள அரசின் சிறந்த எடிட்டருக்கான விருதைப் பெற்ற அப்பு என். பட்டாதிரி இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ஆண்டோ ஜோசப், அபிஜித் எம்.பிள்ளை, ஃபெலினி, படுஷா மற்றும் ஜினிஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சூரஜ் இசையமைக்கிறார்.

நிழல் கதைக்கு நயன்தாரா பொருத்தமாக இருப்பார் என்று படத்தின் நாயகன் குஞ்சாகா போபன் இயக்குநரிடம் யோசனை தெரிவித்துள்ளார். இதையடுத்து நயன்தாராவிடம் இயக்குநர் கதையைச் சொல்ல, அவருக்குப் பிடித்துப் போகவே உடனே சம்மதம் தெரிவித்துள்ளார் நயன்தாரா.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு எர்ணாகுளத்தில் நடைபெற உள்ளது. கேரள அரசின் கொரோனா கால வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி குறைந்த நபர்களுடன் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் வாரத்துக்கு ஒருமுறை படக்குழுவினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மிலிந்த் ராவ் இயக்கத்தில் நெற்றிக்கண் படத்திலும் நடித்து வந்தார் நயன்தாரா. அந்த படத்தின் 60 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா அம்மனாக நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. மூக்குத்தி அம்மன் படம் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார் நயன்தாரா. சிவா இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதிஷ், குஷ்பு என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் உருவாகவுள்ளது. விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்கவிருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கவுள்ளனர். காதலர் தினத்தன்று இதன் அறிவிப்பு வெளியானது. விரைவில் அதன் ஷூட்டிங் தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார்.