இந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை நயன்தாரா முதல் முறை பாலிவுட்டில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தில் கதாநாயகியாக களமிறங்குகிறார். இதனிடையே நயன்தாரா நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிலீஸான திரைப்படம் கனெக்ட்.

முன்னதாக நயன்தாரா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஹாரர் திரைப்படமான மாயா படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் மீண்டும் அடுத்த ஹாரர் த்ரில்லர் படமாக ரவுடி பிக்சர்ஸ் சார்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிக்க, தயாராகியுள்ள கனெக்ட் திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். 

நயன்தாராவுடன் சத்யராஜ், அனுப்பம் கெர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் கனெக்ட் படத்தில் வினய் ராய் மற்றும் ஹனியா நஃபீஸா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவில் கனெக்ட் படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைக்கிறார். 

இடைவேளை இல்லாத முதல் தமிழ் திரைப்படமாக தொடர்ந்து 99 நிமிடங்கள் ஓடக்கூடிய ஹாரர் த்ரில்லர் படமாக கடந்த டிசம்பர் 22-ம் தேதி ரிலீஸான நயன்தாராவின் கனெக்ட் படம் மிரட்டலான ஹாரர் படமாக ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்நிலையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள கனெக்ட் திரைப்படத்தின் வெற்றி குறித்து அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகை நயந்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“இது ஒரு கொண்டாட்டமான வருடமாக எனக்கு இருக்கிறது. நன்றியுணர்வால் நிறைந்துள்ளேன். கனெக்ட் திரைப்படத்தை ஆதரித்த அத்தனை சினிமா காதலர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தொடர்ந்து டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து அடுத்தடுத்து காட்சிகளில் படத்தை ரசிக்கும் அனைவருக்கும் என்னுடைய நன்றியுணர்வை தெரிவித்துக் கொள்கிறேன்.”  என தொடங்கிய அந்த அறிக்கையில், கனெக்ட் திரைப்படத்தின் மீது எப்படிப்பட்ட நம்பிக்கையோடும் நேர்மையோடும் பணியாற்றியதாக குறிப்பிட்டுள்ள நடிகை நயன்தாரா இயக்குனர் அஸ்வின் சரவணன் பணியை குறிப்பிட்டு பாராட்டியுள்ளார். மேலும் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் அவர்களுக்கும் அவரது பணியை குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், “அனைவரது அன்பு, ஆதரவு, கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்கிறோம். இதை எதிர்கால பயணத்திற்கான படிப்பினையாக பயன்படுத்திக் கொள்கிறோம். மீண்டும் உங்கள் அனைவரின் அளவு கடந்த அன்பிற்கு நன்றி உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார். நடிகை நயன்தாராவின் அந்த முழு அறிக்கை இதோ…
nayanthara thanks note for connect movie success