தென்னிந்திய திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. கடைசியாக நடிகை நயன்தாரா தமிழில் நடித்து வெளிவந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். கடந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக வெளிவந்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனையடுத்து பிரபல கொரியன் திரைப்படமான பிளைன்ட் என்னும் சீரியல் கில்லர் திரைப்படத்தை தழுவி தயாராகியிருக்கும் நெற்றிக்கண் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் நடிகை நயன்தாரா பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் கிராஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் நெற்றிக்கண் திரைப்படத்தை இயக்குனர் மிலின்ட் ராவ் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் R.D.ராஜசேகரின் ஒளிப்பதிவில் இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். முன்னதாக  கடந்த வருடம் நெற்றிக்கண் திரைப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த நிலையில் சமீபத்தில் நெற்றிக்கண் படத்தில் இருந்து இதுவும் கடந்து போகும் என்னும் முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களின் மனதை வருடியது. 

இந்நிலையில் நெற்றிக்கண் ரிலீஸ் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியானது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பார்வையற்ற பெண்ணாக நடித்திருக்கும் த்ரில்லர் திரைப்படமான நெற்றிக்கண், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் நேரடியாக வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது. தொடர்ந்து ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.