பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகியாக திகழும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் மாயா படத்தை இயக்கிய இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் அடுத்த ஹாரர் திரைப்படமாக நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் கனெக்ட். இடைவேளை இல்லாத முழு நீள 99 நிமிட திரைப்படமாக வெளிவரும் கனெக்ட் திரைப்படம் நாளை டிசம்பர் 22-ம் தேதி ரிலீஸாகவுள்ளது.

நயன்தாராவுடன் சத்யராஜ், அனுப்பம் கெர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் கனெக்ட் படத்தில் வினய் ராய் மற்றும் ஹனியா நஃபீஸா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரவுடி பிக்சர்ஸ் சார்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிக்க, மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவில், கனெக்ட் படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைக்கிறார்.

இதனிடையே பிரபல தொகுப்பாளர் DD (எ) திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கிய பிரத்தியேக பேட்டியில் கனெக்ட் திரைப்படம் குறித்தும் தனது திரையுலக பயணம் குறித்தும் பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு நயன்தாரா பதிலளித்துள்ளார். இந்த சிறப்பு பேட்டி முதல் பாகம் தற்போது வெளியாகி உள்ளது.

அதில், "உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு 2013 ஆம் ஆண்டு, ஏன் உங்களுக்கு மட்டும் தொடர்ந்து பிரச்சினைகள் வருகின்றன என கேட்டிருந்தேன.. மற்றவர்களுக்கெல்லாம் வெளியில் சென்றால் அவர்கள் தேர்ந்தெடுத்தால் தான் பிரச்சனை வந்து சேரும். ஆனால் உங்களுக்கு மட்டும் பிரச்சினைகள் டோர் டெலிவரி ஆகின்றன. இது பற்றி என்ன நினைக்கிறீர்கள் 2023 வந்தால் பத்து ஆண்டுகள் நிறைவடைகிறது! பத்து ஆண்டுகள் ஆகிவிட்டதே..?" என கேட்க,

“இந்த பத்து ஆண்டுகளில் டோர் டெலிவரி இன்னும் வேகம் கூடி இருக்கிறது. முன்பெல்லாம் கொஞ்சம் தாமதமாக தான் வரும், ஏனென்றால் அப்போது அவ்வளவு ஃபேமஸ் இல்லை டோர் டெலிவரி. அப்போதே எனக்கு கொஞ்சம் சரியாக வந்து விடும். ஆனால் இப்போது இன்னும் வேகமாக வருகிறது. சும்மா இதே போல தான்.. அன்று சொன்ன அதே பதில் தான் இப்போதும் சொல்கிறேன். வீட்டில் சும்மா இருப்பேன்… நான் என் பாட்டுக்கு ஏதோ செய்து கொண்டிருப்பேன். சம்பந்தமே இல்லாமல் ஏதோ ஒன்று டெலிவரி செய்வார்கள்... இப்போது நாம் என்ன செய்தோம்… ஒன்றுமே செய்யவில்லையே… எதற்கு!! இது ஒரு பிரச்சனையா? என்றே நமக்கு புரியாது. ஓ இது நிஜமாகவே ஒரு பிரச்சனை! என நமக்கு புரிவதற்கே ஒரு பத்து நாட்கள் ஆகிவிடும். அதற்குள் வேறு ஒரு பிரச்சனையாகி... இப்போது பரவாயில்லை. இப்போது எப்படி இருக்கிறது என்றால் வேறு வழியே இல்லை என்ன பிரச்சனைகளை வீட்டில் அடுக்கி வைத்திருக்கிறேன். இதுவும் வாழ்க்கையின் ஒரு பகுதிதான் என நினைத்துக் கொள்கிறேன்” என நயன்தாரா பதிலளித்துள்ளார். நயன்தாராவின் கலகலப்பான அந்த முழு பேட்டி இதோ…