நடிகை தேவயானியின் சகோதரரான நடிகர் நகுல் தொகுப்பாளர் ஸ்ருதி பாஸ்கர் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்றது. நகுல் - ஸ்ருதி இருவருமே சமூக வலைதளங்களில் தொடர்ந்து தங்கள் வாழ்க்கையைப் பற்றிப் பகிர்ந்து வருபவர்கள். ஆகஸ்டு மாதம் தனக்கு குழந்தை பிறந்தது குறித்து ஸ்ருதி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். 

தற்போது பிரசவத்துக்குப் பின் இருக்கு உருவ அமைப்பு, உருவ கேலி, அழகு பற்றிய மனநிலை ஆகியவை பற்றி நீண்டப் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், உங்கள் பிரகாசத்தை யாரும் மங்கலாக்க விடாதீர்கள். அழகு என்பது தோல்வரைக்கும்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கொஞ்சம் நேரம் எடுத்து நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பதைப் பாருங்கள். 

ஒவ்வொரு உடலும், ஒவ்வொரு கர்ப்பமும், ஒவ்வொரு குழந்தையும் வித்தியாசமானது. உங்களை, உங்கள் குழந்தையை வேறு யாருடனும் ஒப்பிடக் கூடாது. எல்லோருமே மேம்படும் நிலையில் இருப்பவர்கள்தான். நான் புடவையில் இருக்கும் இந்தப் புகைப்படத்தைப் பகிரும் போது, ஆஹா நான் இதை நன்றாக உடுத்தியிருக்கிறேன், மக்களுக்கு இந்தப் புடவைப் பிடிக்கும், இதுபோல வாங்க வேண்டும் என்று விரும்புவார்கள் என்றுதான் உண்மையில் நினைத்தேன்.

ஆனால், நான் எப்படி ஒல்லியாக இருக்கிறேன், குழந்தை பிறந்து 3 மாதங்கள்தான் ஆகின்றன, எப்படித் தழும்புகள் எதுவும் இல்லை என்றே பலரும் கேட்டது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அப்போது இருந்ததும், இப்போது இருப்பதும் நான்தான். பிரசவ காலத்தில் கூடிய எடை இப்போதும் கொஞ்சம் இருக்கிறது. அப்போது கூடிய வயிறும், சதைக் கொழுப்பும் இன்னும் இருக்கிறது. தழும்புகளும் உள்ளன. 

எனது கைக்குக் கீழே தோலின் நிறம் எப்படி இருந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படமால நான் ஸ்லீவ்லெஸ் உடை அணிகிறேன். நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை ஏற்றுக்கொள்ள, விரும்ப எனக்குப் பல வருடங்கள் ஆனது. எனது உயரத்தை வைத்துக் கேலி செய்வார்கள் என்பதால் சற்று கூன் போட்டு நடப்பேன். எனது மார்பகங்களின் அளவுகளை மனதில் வைத்து தோளை குறுக்கியே வைப்பேன்.

பிரசவ காலத்தின்போது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல விஷயங்களைக் கடந்து வந்திருக்கிறீர்கள். தாயாக இருப்பது எளிதல்ல, ஏன் அந்தத் தழும்புகளை மறைய வைக்க வேண்டும்? போரில் கிடைத்த தழும்புகளை மக்கள் கொண்டாடுவதில்லையா? பின் ஏன் பிரசவத் தழும்புகளைக் கொண்டாடக் கூடாது? எடை குறைந்த பிறகும் ஏன் அந்தத் தழும்புகளை நாம் சுமக்கக் கூடாது? நீங்கள் யார், உங்கள் திறன் என்ன என்பதை உங்களுக்கு நினைவுபடுத்தும்.

இது மீண்டும் சரியான நபருடன் இருப்பது, சரியான நபரைத் திருமணம் செய்துகொள்வது என்கிற விஷயத்துக்கு என்னைக் கொண்டு வருகிறது. பெரும்பாலானவர்கள், வயதாகிவிட்டதனாலோ அல்லது திருமண வயது என்பதை எட்டி விட்டதனாலோ திருமணம் செய்துகொள்ள, குழந்தைகள் பெற்றுக்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

திருமணம், குழந்தைகள் போன்ற விஷயங்கள் நீங்கள் மனதளவில் தயாராக இருந்தால் மட்டுமே நடக்க வேண்டும். நீங்கள் சரியான நபருடன் இருந்தால் அவர் உங்களை ஆதரிப்பார், உங்களுடன் நிற்பார். சரியான நபரை நீங்கள் திருமணம் செய்திருந்தாலே பாதிப் பிரச்சினைகள் இருக்காது. எனவே எச்சரிக்கைகளைப் புறக்கணிக்காதீர்கள், உங்கள் உள்ளுணர்வு சொல்வதைக் கேளுங்கள் என்று ஸ்ருதி பதிவிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sruti Nakul (@srubee)