ஆந்திர மாநிலத்தின் உச்ச நட்சத்திர நாயகனாகவும் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வராகவும் திகழ்ந்த என்.டி.ராமராவ் அவர்கள் 1982ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கி அடுத்த ஒரு வருடத்திற்கு உள்ளாக ஆந்திர மாநிலத்தில் முதல்வராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.. 

என்.டி. ராமராவ் அவர்களுக்கு 8 மகன்களும் 4 மகள்களும் என 12 வாரிசுகள். இவர்களில்  நந்தமூரி ராமகிருஷ்ணா(Sr) 1962-ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் காலமானார். தொடர்ந்து நந்தாமூரி சாய் கிருஷ்ணா உடல்நலக்குறைவு காரணமாக 2004ஆம் ஆண்டு உயிரிழந்தார். தொடர்ந்து நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட கார் விபத்தில் மரணம் அடைந்தார்.

இந்த நிலையில் தற்போது என்.டி. ராமராவ் அவர்களின் இளைய மகளான கந்தமனேனி உமா மகேஸ்வரி தற்போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தெலுங்கானாவின் ஹைதராபாதில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கியபடி சடலமாக உமா மகேஸ்வரியை மீட்ட போலீசார் இது குறித்து விசாரணையை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் உச்ச நட்சத்திரமாகவும் முன்னாள் முதலமைச்சராகவும் திகழ்ந்த என்.டி.ராமராவ் அவர்களின் இளைய மகள் உமா மகேஸ்வரியின் தற்கொலை ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரது மறைவுக்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.