மிஷ்கினின் பிசாசு 2 படத்தின் பணிகள் பூஜையுடன் நேற்று தொடங்கியது. ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் இப்படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். தமிழ் சினிமாவின் தனித்துவமிக்க இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின் இயக்கத்தில் 2014-இல் வெளியான திரைப்படம் பிசாசு. இயக்குனர் பாலா தயாரித்த இப்படத்தில் நாகா, பிரயகா மார்ட்டின், ராதாரவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

வழக்கமான பேய் படத்தைப் போல் அல்லாமல், அதனுள் காதல், சென்டிமென்ட் என உணர்வுப்பூர்வமான காட்சிகளை நிரப்பினார். மிஷ்கினின் தனித்துவமான உருவாக்கப் பாணியில் இருந்த அப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தற்போது பிசாசு 2 படத்தை மிஷ்கின் தொடங்கியுள்ளார். சமீபத்தில் இதன் அதிகாரப்பூர்வ செய்தி வெளியானபோதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு கூடியது. தொடர்ந்து நேற்று இதன் முதற்கட்ட பணியும் ஆரம்பமாகியுள்ளது. படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்கி ஒரே கட்டமாக முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். படப்பிடிப்புக்கு பிரம்மாண்டமான செட் வேலைகள் திண்டுக்கல்லில் துவங்கியுள்ளது.

பிரபல இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா மீண்டும் களமிறங்க, லண்டனை சேர்ந்த சிவா சாந்தகுமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கின்றார். சவரக்கத்தி பட புகழ் நடிகை பூர்ணாவும் இந்த படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் பிசாசு 2 படத்தின் இசை பணிகள் துவங்கிவிட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார் மிஷ்கின். இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா உடன் கம்போசிங்கில் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். பாடலாசிரியர் கபிலன் படத்திற்கு இரண்டு பாடல்கள் எழுதியுள்ளாராம். பிசாசு 2 படத்திற்கான பாடல் பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டே இருக்கிறது. 

முன்னதாக மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதிராவ் ஹைதரி, நித்யா மேனன், ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்டோர் நடித்த சைக்கோ படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிசாசு 2 படத்தையும் ரசிகர்கள் விரும்பும் வகையில் மிஷ்கின் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.