நடிகர் தனுஷ் - இயக்குனர் வெற்றிமாறன் வெற்றிக் கூட்டணியில் கடைசியாக வெளிவந்த அசுரன் மற்றும் இந்த ஆண்டு இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளிவந்த கர்ணன் இந்த இரண்டு திரைப்படங்களையும் கலைபுலி எஸ்.தாணு அவர்கள் தயாரித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக மீண்டும் நடிகர் தனுஷுடன் மூன்றாவது முறையாக தயாரிப்பாளர் கலைபுலி எஸ்.தாணு அவர்கள் இணைந்திருக்கிறார்.

இயக்குனர் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்க தயாரிப்பாளர் எஸ்.தாணு அவர்கள் தயாரிக்கிறார். முன்னதாக நானே வருவேன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. நானே வருவேன் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.
  
இயக்குனர் செல்வராகவன்-யுவன் ஷங்கர் ராஜா-தனுஷ் கூட்டணியில் வெளிவரும் திரைப்படங்களுக்காக ரசிகர்கள் எப்போதும் காத்திருப்பது உண்டு. அந்த வகையில்  தற்போது ரசிகர்களுக்கு விருந்தாக அமைய உள்ள நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு பற்றிய முக்கிய அறிவிப்பை நேற்று இயக்குனர் செல்வராகவன் தெரிவித்திருந்தார். 

வருகிற ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா நானே வருவேன் படத்தின் பாடல்கள் குறித்த பரபரப்பான தகவலை தற்போது வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள யுவன்ஷங்கர்ராஜா “இரண்டாவது பாடலின் பணிகள் நடைபெறுகிறது நீங்கள் கேட்பதற்காக காத்திருக்கிறேன்” என்று இயக்குனர் செல்வராகவனையும் தனுஷையும் குறிப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.