தமிழ் திரையுலகில் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர்கள் வெற்றிமாறன் கடைசியாக இயக்கிய திரைப்படம் அசுரன். அடுத்ததாக தற்போது நடிகர் சூரி மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து விடுதலை திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறனின் கதை மற்றும் திரைக்கதையில்  உருவாகும் திரைப்படம் அதிகாரம். நடிகன் சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் மற்றும் காக்கிச்சட்டை,  நடிகர் தனுஷின் கொடி மற்றும் பட்டாஸ் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் R.S.துரை செந்தில்குமார்  அதிகாரம் திரைப்படத்தை இயக்குகிறார்.

முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கதிரேசன் மற்றும் கிராஸ் ரூட் பிலிம் சார்பில் இயக்குனர் வெற்றிமாறன் இணைந்து அதிகாரம் திரைப்படத்தை தயாரிக்கிறார்கள். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் இயக்குனருமான நடிகர் ராகவா லாரன்ஸ் அதிகாரம் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

சமீபத்தில் அதிகாரம் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது அதிகாரம் திரைப்படத்தின் இசையமைப்பாளர் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் தமன்.S அதிகாரம் திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பு வெளியானது.