வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது வலிமை. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஒரு வருடத்திற்கும் மேலாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் படத்தின் டைட்டில் வலிமை என்பதைத் தவிர படத்தை பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். படக்குழு சரியான நேரத்தில் அறிவிப்பு வரும் என்று தெரிவித்திருந்தாலும் பிரதமர் தொடங்கி, முதல்வர், விளையாட்டு பிரபலங்கள் என பலரிடமும் அப்டேட் கேட்டு வருகின்றனர் அஜித்தின் தீவிர ரசிகர்கள்

இதையடுத்து விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்தார். அதேபோல் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா அஜித்தின் ஓபனிங் பாடலை முடித்திருப்பதாகவும், விக்னேஷ் சிவன் எழுதியிருக்கும் அந்தப் பாடல் குத்துப் பாடலாக அமைந்திருப்பதாகவும் ஒடிசாவிலிருந்து ட்ரம்ஸ் கலைஞர்களை அழைத்து வந்து பணியாற்றி இருப்பதாகவும் தெரிவித்தார். 

இந்நிலையின் யுவன் இசையமைத்திருக்கும் வலிமை படத்தின் பாடலை தான் கேட்டதாகவும், தல அஜித்துக்காக காத்திருப்பது வொர்த் தான் எனவும் பிரபல இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் அஜித் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

கடந்த சில நாட்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் நடித்திருக்கும் வலிமை சம்பந்தப்பட்ட அப்டேட் கேட்டு அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமுற செய்கிறது. முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். 

அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில், மற்றும் சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீதுள்ள மரியாதையை கூட்டும்.

இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும், சமூகவலைதளங்களிலும் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன் இவ்வாறு அஜித் தெரிவித்திருந்தார்.