இந்தியத் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராகவும், ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த மனிதராகவும் வலம் வருபவர் ஏ.ஆர்.ரஹ்மான். இந்தியப் படங்கள் மட்டுமன்றி ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் தொடர்ந்து பல மொழி படங்களில் பணிபுரிந்து வருகிறார். 

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் காலமான செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகத்துக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாம். மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு, பின்பு வீட்டிலேயே வைத்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்ததாம். இன்று டிசம்பர் 28 காலை சிகிச்சை பலனின்றி கரீமா பேகத்தின் உயிர் பிரிந்தது.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 9 வயது இருக்கும்போதே, தந்தை ஆர்.கே.சேகர் காலமாகிவிட்டார். அதற்குப் பிறகு தாயார் அரவணைப்பில் வளர்ந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். தனது பல பேட்டிகளில் இசையமைப்பாளராக உருவானதற்கு அம்மா தான் காரணம் எனத் தெரிவித்துள்ளார் ரஹ்மான். பல கடினமான சூழ்நிலையில், குழந்தைகளை சிறப்பாக வளர்த்து உருவாக்கிய பெருமை தாயார் கரீமாவை சேரும். 

அம்மாவின் மறைவுக்கு ஏ.ஆர்.ரஹ்மானுக்குப் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். கரீமா பேகத்தின் பேரன் ஜி.வி.பிரகாஷும் இசையமைப்பாளர் மற்றும் நடிகராக வலம் வருவது குறிப்பிடத்தக்கது. இசைப்பிரியர்கள் பலரும் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

கடந்த ஆண்டு பிகில் படத்திற்கு இசையமைத்த ரஹ்மான். தற்போது தனுஷ் நடித்து வரும் அத்ரஞ்கி ரே, சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான், சியான் விக்ரமின் கோப்ரா போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.